நம்பிக்கை, வாக்குறுதி, குணமளித்தலில் நிறைந்த அருளாளர் சாத்தி.
மெரினா ராஜ் -வத்திக்கான்
நம்பிக்கை, வாக்குறுதி, குணமளித்தல் போன்றவற்றால் தன் வாழ்வை நிரப்பிய அருளாளர் சாத்தி அர்ப்பண வாழ்வில் சிறந்து விளங்கியவர் என்றும் நல்ல சமாரியன் போல பணிகள் பல ஆற்றி, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் சலேசிய சபையினருக்கு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சலேசிய சபை அருள்சகோதரர் அருளாளர் Artemide Zatti, அக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புனிதராக அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் அக்டோபர் 8 இச்சனிக்கிழமை, அச்சபையினரை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
புனிதராக திருநிலைப்படுத்தப்பட இருக்கும் அருளாளர் சாத்தி இத்தாலியிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு புலம்பெயர்ந்தவர், ஏழைகளின் உறவினர், முழுமையாக அர்ப்பண மனம் கொண்ட சலேசிய அருள் சகோதரர், தொழிலாளர்களின் பரிந்த்துரையாளர் என்று எடுத்துரைத்து அதன்படி வாழ அச்சபையினரைக் கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 9, 2022 அன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கும் புனிதர் பட்ட நிகழ்வில், புனித ஜான் போஸ்கோவின் சலேசிய சபையைச் சேர்ந்த அருளாளர் Artemide Zatti , மற்றும் ஸ்கலபிரினி மறைபரப்பு சபை நிறுவனர் அருளாளர் திருமுழுக்கு யோவான் ஸ்கலபிரினி என இருவர் புனிதராக உயர்த்தப்பட இருக்கின்றனர்.
அருளாளர் சாத்தி, புலம்பெயர்ந்தவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு உயிர்ப்பின் சக்தியுடன் பணிபுரியும் ஆற்றல் பெற்றவர் என்றும் புனித ஜான் போஸ்கோவின் பண்புகளை தன் வாழ்வின் சிறப்பியல்பாக கொண்டு விளங்கியவர் என்றும், அவர் புனிதராக அறிவிக்கப்பட இருப்பது சலேசிய சபை முழுவதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது எனவும் அச்சபையின் அருள் சகோதரர்கள் தெரிவிக்கின்றனர். .
1880 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி இத்தாலியில் பொரெட்டோவில் (ரெஜியோ எமிலியா) பிறந்து தன் 17வது வயதில் வறுமையின் காரணமாக அர்ஜென்டினாவுக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர் என்றும், சலேசிய சபை அருள் சகோதரராக இறுதி அர்ப்பணம் கொடுத்து வாழ்ந்து, காச நோயால் பாதிக்கப்பட்ட இவரை அன்னை மரியாள் தன் பரிந்துரையால் நலமாக்கினார் என்றும் அறியப்படுகின்றது. அதன்பின் மருத்துவமனையில் பணிபுரிவதற்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்து, அனைவராலும் மதிக்கப்படும் வகையில் சிறப்பாக பணியாற்றி இறுதியில் குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்