Mariannhill மறைப்பணியாளர் சபையின் பொதுப் பேரவை பிரிதிநிதிகள் Mariannhill மறைப்பணியாளர் சபையின் பொதுப் பேரவை பிரிதிநிதிகள் 

Mariannhill சபையிடம் திருத்தந்தை: புனிதத்துவத்தில் வளருங்கள்

தென்னாப்ரிக்காவில் மறைப்பணியாற்றிய ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த, டிராபிஸ்ட் துறவு சபைத் தலைவர் Franz Pfanner என்பவர், 1882ஆம் ஆண்டில் Mariannhill மறைப்பணியாளர் சபையைத் தொடங்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நற்செய்தியை அறிவிப்பதிலும், புனிதத்துவத்தைப் பரப்புவதிலும், ஒருங்கிணைந்த பயணத்தை வரவேற்பதிலும் சிறந்துவிளங்கும் Mariannhill மறைப்பணியாளர் சபைக்கு தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 20, இவ்வியாழன் காலையில் Mariannhill மறைப்பணியாளர் சபையின் 17வது பொதுப் பேரவையில் பங்குபெறும் ஏறத்தாழ நாற்பது பிரதிநிதிகளை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  

தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு செவிமடுப்பதற்கு எப்போதும் திறந்தமனம் கொண்டவர்களாய், வருங்கால மறைப்பணியை ஆற்றுமாறு ஊக்கப்படுத்தினார்.

வெளிநாடுகளில் மறைப்பணியாற்றுவதற்கு தங்களையே அர்ப்பணித்துள்ள Mariannhill சபையினர் உரோம் நகரில் நடத்திவரும் இந்தப் பொதுப் பேரவை, அச்சபை தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டை சிறப்பிப்பதாக உள்ளது என்பதையும் தன் உரையில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

டிராபிஸ்ட் துறவு சபையின் தலைவர் Franz Pfanner  அவர்கள், நற்செய்தி அறிவிப்புப்பணி ஆர்வத்தால் தூண்டப்பட்டு, தனது சபை தோழர்களின் உதவியோடு Mariannhill சபையை ஆரம்பித்தார் என்றும், அச்சபையினர், இக்காலம் முன்வைக்கும் சவால்களுக்கு மத்தியில், நற்செய்தி அறிவிப்புப்பணியில் முன்னோக்கிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புனிதத்துவம், நீதி மற்றும், அமைதியின் இறையாட்சியை எங்கும் பரப்புவதில், சபையின் தனிவரத்திற்குப் பிரமாணிக்கமாக இருந்து ஆற்றுமாறும் கூறியுள்ளார்.

“தோழமை: ஒரே மனம் மற்றும், ஒரே நோக்கம் கொண்டிருக்க அழைப்பு” என்ற இப்பொதுப் பேரவையின் தலைப்பை மையப்படுத்தி தன் எண்ணங்களை எடுத்துரைத்த திருத்தந்தை, அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு உலகளாவியத் திருஅவையில் தயாரிப்புகள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், இத்தலைப்பு காலத்திற்கேற்றது என்று பாராட்டியுள்ளார்.

திருஅவையின் வாழ்வு, மற்றும், வருங்காலப் பணிகளுக்கு, பொதுநிலையினர் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பது, திருஅவையின் ஒருங்கிணைந்த பயணப் பாதையில் வளர்க்கப்படவேண்டியது இன்றியமையாதது என்று, Mariannhill மறைப்பணியாளர்களிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Mariannhill மறைப்பணியாளர் சபையின்  பொதுப் பேரவை பிரதிநிதிகள்
Mariannhill மறைப்பணியாளர் சபையின் பொதுப் பேரவை பிரதிநிதிகள்

Mariannhill மறைப்பணியாளர் சபை

தென்னாப்ரிக்காவில் மறைப்பணியாற்றிய ஆஸ்ட்ரிய நாட்டைச் சேர்ந்த, டிராபிஸ்ட் துறவு சபை மறைப்பணியாளர் Franz Pfanner என்பவரால், 1882ஆம் ஆண்டில் Mariannhill மறைப்பணியாளர் சபை தொடங்கப்பட்டது.

கொலம்பியா, ஆஸ்ட்ரியா, கிழக்கு ஆப்ரிக்கா, இஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கானடா, நெதர்லாந்து, சாம்பியா, சிம்பாபுவே, அமெரிக்க ஐக்கிய நாடு, பாப்புவா கினி ஆகிய நாடுகளின் இச்சபையின் பிரதிநிதிகள் பங்குபெறும் பொதுப் பேரவை, அக்டோபர் 23, வருகிற ஞாயிறன்று நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2022, 14:59