திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும்  சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades  

திருத்தந்தை, சைப்ரஸ் அரசுத்தலைவர் Anastasiades சந்திப்பு

சைப்ரஸ் தீவு நாட்டை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள், கலந்துரையாடல் வழி தீர்வு காணல் போன்றவை சைப்ரஸ் அரசுத் தலைவருக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான சந்திப்பில் முக்கிய இடம்பெற்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

அக்டோபர் 24, இத்திங்கள் காலை 8.50 மணி முதல் 9.15 வரை சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார், சைப்ரஸ் அரசுத்தலைவர் Anastasiades.

திருப்பீடத்திற்கும், சைப்ரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், சிறப்பாக, அந்நாட்டில் பொது நலனை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள், குறிப்பாக, கல்வி, நலவாழ்வு, சமூகநலம் போன்ற துறைகளில் திருஅவையின் பணிகள் திருப்தியாக உள்ளன  என்று சைப்ரஸ் அரசுத்தலைவர் கூறினார் எனவும் திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தவர் பாதுகாப்பு, போர்களை நிறுத்துதல், இத்தீவு நாட்டை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள், கலந்துரையாடல் வழி தீர்வு காணல் போன்றவை குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது. 

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின்போது, திருத்தந்தை அவர்கள் சைப்ரஸ் அரசுத்தலைவரிடம் மொசைக் பலவண்ண கற்கலால் வடிவமைக்கப்பட்ட சிறு நல்லாயன் கலைவடிவம் ஒன்றையும், அவரின் அண்மை ஏடுகளின் பிரதிகளையும் பரிசாக வழங்க, சைப்ரஸ் அரசுத்தலைவரோ வெள்ளியாலான கிண்ணம் ஒன்றை திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2022, 13:21