திருத்தந்தை, ஹொண்டூராஸ் அரசுத்தலைவர் Sarmiento சந்திப்பு திருத்தந்தை, ஹொண்டூராஸ் அரசுத்தலைவர் Sarmiento சந்திப்பு  

திருத்தந்தை, ஹொண்டூராஸ் அரசுத்தலைவர் Sarmiento சந்திப்பு

ஹொண்டூராஸ் அரசுத்தலைவர் Sarmiento அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஹொண்டூராஸ் நாட்டு அரசுத்தலைவர் Iris Xiomara Castro Sarmiento அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 20, இவ்வியாழன் காலையில், திருத்தந்தையின் நூலகத்தில், ஏறத்தாழ 35 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணிக்கு, திருத்தந்தையைச் சந்தித்த ஹொண்டூராஸ் அரசுத்தலைவர் Castro Sarmiento அவர்கள், அதற்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார்.

இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், ஹொண்டூராஸ் நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், இவ்விரு தரப்புகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கும் அந்நாடு வெளிப்படுத்தியுள்ள ஆர்வத்தை திருப்பீடம் பாராட்டியதாக கூறியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராசின் பொது நலனுக்கு, குறிப்பாக, கல்வி, நலவாழ்வு, புலம்பெயர்ந்தோர் நலப்பணி, வறுமை ஒழிப்பு போன்றவற்றுக்கு தலத்திருஅவை ஆற்றிவரும் விலைமதிப்பற்ற பணிகளுக்கு, அரசுத்தலைவர் தன் நன்றியைத் தெரிவித்தார் எனவும், திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கள், வறுமைக்கு எதிரான நடவடிக்கை, நாட்டின் பொதுநலன், மற்றும், ஒப்புரவைப் பேணி வளர்ப்பதில் தொடர் முயற்சிகளின் அவசியம்  போன்ற தலைப்புக்களிலும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது

பரிசுப்பொருள்கள்

2022ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல் உட்பட, தான் வெளியிட்ட பல ஏடுகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் Castro Sarmiento அவர்களுக்குப் பரிசாக அளித்தார். அன்னை மரியா திருவுருவம், மரத்தாலான ஒரு செபமாலை போன்றவற்றை, அரசுத்தலைவர் Castro Sarmiento அவர்கள் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

பிரேசில் ஆயர்கள்

அத் லிமினா சந்திப்பில் பிரேசில் ஆயர்கள்
அத் லிமினா சந்திப்பில் பிரேசில் ஆயர்கள்

மேலும், ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா சந்திப்பையொட்டி, பிரேசில் நாட்டு ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2022, 14:50