திருத்தந்தை: 2023ஆம் ஆண்டு உலக இளையோர் நாளுக்கு முன்பதிவு

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-6 வரை லிஸ்பனில் நடைபெறவிருக்ம் 37வது உலக இளையோர் நாள், இன்னும் 281 நாள்களில் தொடங்கவுள்ளது. இதற்கு lisboa2023.org என்ற இணையதள முகவரியில் பெயர்களைப் பதிவுசெய்யலாம்

மேரி தெரேசா: வத்திக்கான்

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் நடைபெறவிருக்கும் 37வது உலக இளையோர் நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று முன்பதிவு .செய்தார்.

அக்டோபர் 23, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், உரோம் நகரில் படிக்கும் போர்த்துக்கல் நாட்டு பல்கலைக்கழக இரு இளையோர், தனக்கு வழங்கிய டாபிளட்டில், அவர்களின் உதவியுடன், இணையதளம் வழியாக, வருகிற ஆண்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கு தன் பெயரை அதிகாரப்பூர்வமாக முன்பதிவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதேபோல், உலகெங்கும் இருக்கின்ற இளையோரும் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார், .

37வது உலக இளையோர் நாளுக்கு முன்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது என்றும், ஒரு திருப்பயணியாக நான் முன்பதிவுசெய்யும்போது இரு போர்த்துக்கீசிய இளையோர் என்னோடு இருக்குமாறு அழைப்புவிடுத்தேன் என்றும் திருத்தந்தை கூறினார்.  

பெருந்தொற்று காரணமாக, நீண்ட காலத்திற்குப்பிறகு, மக்களுக்கு இடையே, மற்றும், தலைமுறைகளுக்கு இடையே உடன்பிறந்த உணர்வைத் தழுவிக்கொள்ளும் மகிழ்வை நாம் மீண்டும் கண்டுரணவுள்ளோம் எனவும், இந்த ஓர் உணர்வு நமக்கு அதிகம் தேவைப்படுகிறது எனவும் திருத்தந்தை கூறினார்.

96வது உலக மறைபரப்பு ஞாயிறு

மூவேளை செப உரை 231022
மூவேளை செப உரை 231022

"நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (தி.ப.1:8) என்ற தலைப்புடன் இஞ்ஞாயிறன்று உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட 96வது உலக மறைபரப்பு ஞாயிறு குறித்தும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்குச் சான்று, மற்றும் அதை அறிவிப்பதன் வழியாக, திருஅவையின் உலகளாவிய மறைபரப்புப்பணியில் பங்குகொள்வதற்கு திருமுழுக்குப் பெற்ற அனைவரின் ஆவலை தூண்டுவதற்கு, இஞ்ஞாயிறு ஒரு முக்கியமான வாய்ப்பாகும் என்று கூறினார்.

அனைவரும் தங்களின் செபம் மற்றும், ஒருமைப்பாட்டுணர்வால் மறைப்பணியாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை, இதனால் அவர்கள், உலகெங்கும் நற்செய்தி அறிவிப்பு மற்றும், மனித முன்னேற்றப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

இஸ்பெயினின் புதிய அருளாளர்கள்

1936ஆம் ஆண்டில் இஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது தங்களது மறைசாட்சிய மரணத்தால் கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்ந்த உலக மீட்பர் சபையின் அருள்பணி Vincenzo Nicasio Renuncio, மற்றும், அவரது 11 தோழர்கள், அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதையும் இஞ்ஞாயிறன்று திருத்தந்தை நினைவுகூர்ந்தார். இவர்களின் சான்று வாழ்வு, நற்செய்தி அறிவிப்பில் நமக்கு உறுதியான உள்தூண்டுதலாய் இருக்கின்றது என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2022, 12:45