இத்தாலிய பங்குத்தள கத்தோலிக்க கழக இளையோர் தலைவர்கள் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
நம் கிறிஸ்தவ நம்பிக்கைப் பயண வாழ்வுக்கும், அதில் வளர்வதற்கும் உதவியாக இருப்பது, மற்றும், அதற்கு மிக முக்கியமானது, பங்குத்தள அனுபவம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 29, இச்சனிக்கிழமையன்று இத்தாலிய கத்தோலிக்க கழக இளையோரிடம் கூறியுள்ளார்.
இத்தாலியின் பங்குத்தளங்களில் கத்தோலிக்க கழகங்களின் தலைவர்களாகப் பணியாற்றும் இளையோர் மற்றும், அவர்களை வழிநடத்துவோர் என ஏறத்தாழ இரண்டாயிரம் பேரை, இச்சனிக்கிழமை முற்பகலில் வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, அவர்களோடு தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
பங்குத்தள அனுபவம்
மக்கள், தங்களின் கிறிஸ்தவ வாழ்வு அனைத்திற்கும் பங்குத்தந்தையையே சார்ந்து இருந்ததொரு, சமூக மற்றும், திருஅவைச் சூழலில் நான் வளர்ந்துவந்தேன், ஆனால், தற்போது இத்தாலி உட்பட மற்ற நாடுகளில் திருஅவையின், குறிப்பாக பங்குத்தளத்தின் மறைப்பணி பற்றிய மீள்பார்வை தேவைப்படுகின்றது என்றுரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இருந்தபோதிலும், நற்செய்திக்குச் செவிமடுக்க, ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள, மனத்தாராளத்தோடு தொண்டுபுரிய, குழுமத்தோடு சேர்ந்து செபிக்க, திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள, மற்றும், இறைமக்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்வதற்கு, எல்லாக் காலத்திலும் உதவுவது பங்குத்தளச்சூழலே என்று திருத்தந்தை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
பங்குத்தளத்திற்கு உதவும் முறைகள்
நாம் மாறுபட்ட தலைமுறைகளைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும், திருஅவை மற்றும், பங்குத்தளம்மீது, பேரன்பு என்ற பொதுவான பண்பைக் கொண்டிருக்கிறோம் என்று, இளையோர் தலைவர்களிடம் கூறியத் திருத்தந்தை, இவர்கள், உடன்பிறந்த உணர்வில் திருஅவையின் வளர்ச்சிக்கு உதவுவதற்குக் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு முதலில் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது பங்குத்தளக் குழுமங்களில் காண்கின்ற சில பலவீனமான கூறுகளைக் கண்டு அஞ்சவேண்டாம் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கூட்டங்கள், விவாதங்கள், மாநாடுகள் போன்றவை நடத்துவது போன்ற நிலை ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு கிடையாது, ஆனால் தற்போது பரவிவரும் தனிமனிதப் போக்கும், தனியாக அல்லது சிறு குழுக்களில் தங்களை முடக்கிக்கொள்ளும் தன்மையும் கிறிஸ்தவ குழுமத்தைப் பாதிக்கின்றது என்று கூறியுள்ளார்.
இளையோரும், ஏதாவது ஒரு வகையில் இத்தகைய கலாச்சாரத்தின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றனர், எனவே இது குறித்து ஆண்டவரோடு இணைந்து சிந்தித்துப் பார்க்குமாறும், மற்றவருக்குத் திறந்த மனதாயிருந்து, அவர்களைச் சந்திக்குமாறும், கூறியத் திருத்தந்தை, இவ்வாறு செய்யும்போது நம்மையே அறிந்துகொள்கிறோம், மற்றும், ஒன்றுசேர்ந்து வளர்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
இதனை, திருஅவையில் உணர்கின்றோம் என்றும், இத்திருஅவையில் நிலவும் உடன்பிறந்த உணர்வு, கிறிஸ்துவில், மற்றும், நம்மிலும், நம் மத்தியிலும் அவரது இருத்தலில் வேரூன்றப்பட்டுள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், சமுதாயத்தில் புளிக்காரமாக மாறுவது எவ்வாறு என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
பொறுப்புக்களைக் கொண்டிருக்கும் இவ்விளையோருக்கு, சில இத்தாலிய இளம் புனிதர்களையும் எடுத்துக்காட்டாக முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விளையோர் பங்குத்தளத்திலும், சமுதாயத்திலும் வாழ்வு பற்றிப் பகிர்ந்துகொண்டு அதற்குச் சான்றுகளாக வாழமுடியும் என அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த அக்டோபரில் இவ்விளையோரைச் சந்திப்பது குறித்து குறிப்பிட்டு, செபமாலையின் பேருண்மைகளைத் தியானித்து, அவற்றை தினசரி வாழ்வில் ஒளிரச்செய்யுமாறு கேட்டுக்கொண்டு அவர்களின் கத்தோலிக்க கழக நற்பயணத்தைத் தொடர்வதற்கு தன் ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்பின் இறுதியில், தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனவும் திருத்தந்தை இளையோர் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்