உக்ரைன் கீவ் நகரில் போரின் பாதிப்பு உக்ரைன் கீவ் நகரில் போரின் பாதிப்பு 

அணுப் பேரழிவை அச்சுறுத்தும் போர் நிறுத்தப்படவேண்டும்

அமைதியே, நல்லதோர் அரசியலின் இலக்காக எப்போதும் இருக்கவேண்டும், மற்றும், நல்ல கிறிஸ்தவர்கள் எப்போதும் மற்றவரோடு உரையாடலை மேற்கொள்ளும்முறையைத் தேடவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

போரையும், அணு ஆயுதப் பேரிடர் அச்சுறுத்தலையும் முடிவுக்குக்கொணருமாறு உலக நாடுகளை கெஞ்சிக் கேட்பதாக, அக்டோபர் 18, இச்செவ்வாயன்று விற்பனைக்கு வருகின்ற தனது புதிய நூல் ஒன்றில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கடவுளின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நம்பிக்கையான வருங்காலத்திற்கு பத்து இறைவேண்டல்கள்” என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள புதிய நூலிலிருந்து “La Stampa” என்ற இத்தாலிய தினத்தாள், அக்டோபர் 16, இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள பகுதியில் இவ்வாறு திருத்தந்தை, போரை நிறுத்துமாறு நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற பத்தாம் ஆண்டு நிறைவுறுவதை முன்னிட்டு, Hernan Reyes Alcaide என்பவர் தொகுத்துள்ள திருத்தந்தையின் இப்புதிய நூலை Piemme பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அமைதி ஆட்சிசெய்யும் சிறந்ததோர் உலகை கட்டியெழுப்ப நாடுகளும் மக்களும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்று, இப்புதிய நூலில் உலகமனைத்திற்கும் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போருக்கு தெளிவான முறையில் கண்டனம்

நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சனைகளுக்கு போரால் தீர்வு காண முடியாது மற்றும், போர் எப்போதும் மனித சமுதாயத்திற்குத் தோல்வியாகவே அமையும் என்ற கத்தோலிக்கத் திருஅவையின் போதனையை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்ததிலிருந்து, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் பயங்கரமான விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற இரு உலகப் போர்களைத் தொடர்ந்து, தற்போது சிறிது சிறிதாக நடத்தப்பட்டுவரும் ஒரு மூன்றாம் உலகப்போரின் பாதிப்புக்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். தற்போதைய போர், உலகளாவிய ஒரு போரை மூழுவீச்சில் விரிவுபடுத்தும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது என்றும், திருத்தந்தை தனது புதிய நூலில் தெளிவாகக் கூறியுள்ளார்.

முந்தையப் போர்களுக்கு எதிரான தங்களின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த எனது முந்தைய வழித்தோன்றல்களோடு நானும், ஒரு போர், நியாயமானது என்று கூறுவதற்கு எந்த ஒரு தருணமும் வந்தது கிடையாது மற்றும், போரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமே கிடையாது என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரையாடல், நம்பிக்கை இயலக்கூடிய பாதைகள்

போரை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது மற்றும், அது பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க இயலாது, மாறாக, உரையாடல், செவிமடுத்தல், படைப்பாற்றல்கொண்ட தூதரக நடவடிக்கை போன்றவற்றிலும், ஆயுதப் பலம் அல்லது குற்றச்செயலைத் தூண்டுதலின் அடிப்படையில் அமையாத ஓர் அமைப்பைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குகொண்ட அரசியலிலும் நாடுகள் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியே, நல்லதோர் அரசியலின் இலக்காக எப்போதும் இருக்கவேண்டும், மற்றும், நல்ல கிறிஸ்தவர்கள் எப்போதும் மற்றவரோடு உரையாடலை மேற்கொள்ளும்முறையைத் தேடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நம் பொதுவான நம்பிக்கைக்கு வழியமைக்கின்ற பாதைக்கு அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும் மற்றும், அமைதியைக் கட்டியெழுப்பும் இந்த சமூக நடவடிக்கையில் பங்கெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆயுத வர்த்தகம், துப்பாக்கிகள் அச்சுறுத்தல்

ஆயுதப் பரவல் குறித்தும் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை, சிறந்ததோர் வாழ்வைத் தேடுவோருக்கு நாடுகளின் எல்லைகளை மூடுதல், ஆயுத வர்த்தகம் ஆகியவை இந்த நம் காலத்தின் அறநெறிசார்ந்த மிக கேவலமான அவமானமாகும் எனவும், ஆயுத வர்த்தகத்தைக் கைவிட்டு பொது நலன், உடன்பிறந்த உணர்வு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் ஆகியவற்றில் ஆயுத வர்த்தகர்கள் ஈடுபடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனிப்பட்டவரிடம் துப்பாக்கிகள் இருப்பது மொத்தமாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஆபத்துக்கு இட்டுச்செல்கின்றது என்றும், திடீரென இடம்பெறும் துப்பாக்கிச்சூடு வன்முறையால், இளம் சிறார் உயிரிழக்கின்றனர் என்றும், அணு ஆயுதங்களும் இப்பூமியில் மனித சமுதாயத்தின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்றும், நம் தெரிவுகளானது, வன்முறையற்ற மற்றும், நல்லிணக்கப் பாதையைப் பின்செல்லத் தூண்டுவதாய் இருக்கவேண்டும், இவையனைத்தும் நம்மையே சார்ந்துள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2022, 13:06