திருத்தந்தை-"சந்திப்புக்கள் வாழ்க்கையை மாற்றும்"
மெரினா ராஜ் - வத்திக்கான்
சந்திப்புக்கள் நம் வாழ்க்கையை மாற்றும், நம்மை உயர்த்தும், குணப்படுத்தும் எனவும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஒரே இதயத்தோடு ஒன்று கூடிய சீடர்கள்போல வாழ முற்படுங்கள் எனவும் பிரெஞ்சு மொழி பேசும் புலம்பெயர்ந்தோர்க்கு அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 14 இவ்வெள்ளி கொன்சிஸ்தொரோ அறையில் பிரெஞ்சு மொழி பேசும் , புலம்பெயர்ந்தோர் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய திருத்தந்தை, ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தல், வாழ்வு கதைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் வழியாக இயேசுவின் நெருக்கத்தை உணரலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இயேசுவின் இறப்பிற்குப் பின் ஒரே இதயத்தோடு ஒன்று கூடிய சீடர்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கள், பயம் போன்றவற்றை விடுத்து விடாமுயற்சியுடன் செபித்து தூய ஆவியைப்பெற்றது போலவும், இறைவன் மேல் நம்பிக்கை கொண்டு புதிய பாதையில் தன் பயணத்தை மேற்கொண்ட ஆபிரகாம் போலவும் வாழ வலியுறுத்தினார் திருத்தந்தை.
இருபக்கமும் கூர்மையான இறைவனின் வார்த்தையைக் கேட்கவும், அறிவிக்கவும், பல மொழி பேசும் தலத்திருஅவையினரோடு வாழக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இறைவனின் ஆச்சரியங்களை பிறருக்கு எடுத்துரைப்பவர்களாக வாழ கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
மேலும், ஒன்றிணைந்து, ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு, இரக்கமுள்ள இறைவனின் நற்செய்தியைப் பிறருக்கு எடுத்துரைப்பவர்களாக வாழ, திருஅவையின் முகத்தை புதுப்பிக்க, வழிகாட்டும் தூய ஆவியின் வழிநடத்துதலின்படி வாழக் கேட்டுக்கொண்டார்.
cattoliche francofone என்னும் அமைப்பு ஆண்டுக்கு ஒரு முறை ஐரோப்பிய நாடுகளின் ஏதாவது ஒரு பகுதியிலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாரிசிலும் கூட்டத்தைக் கூட்டுகின்றது.
பிரெஞ்சு மொழி பேசும் புலம்பெயர்ந்த கிறிஸ்தவர்கள் அமைப்பு, ஒன்று கூடி தங்களது அனுபவங்களைச் சந்தித்துப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது. ஏறக்குறைய இருபது இலட்சம் பிரெஞ்சு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்