திருத்தந்தை: நம்பிக்கையின் நற்செய்தியை அறிவியுங்கள்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கைம்மாறு கருதாது நம்மைப் பேணி பாதுகாத்து வருகின்ற நம் அன்னை பூமியை நாம் பராமரிக்காவிட்டால் அவ்வன்னை தொடர்ந்து அவ்வாறு செய்துகொண்டிருக்கமாட்டார் என்பதைப் பரிந்துகொள்வது நம் ஒவ்வொருவரையும் சார்ந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 03, இத்திங்களன்று துறவு சபை ஒன்றிடம் கூறியுள்ளார்.
வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் தன்னை சந்திக்க வந்திருந்த அமலமரி தியாகிகள் சபையின் 37வது பொதுப்பேரவை பிரதிநிதிகள் நூறு பேருக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, அப்பிரதிநிதிகள், இப்பொதுப் பேரவையில் நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாப்பது குறித்து அடிக்கடி கலந்துரையாடி வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
அமலமரி தியாகிகள் சபையினர், இப்பூமியைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆற்றுமாறும், அச்சபையின் நிறுவனரான புனித Eugene de Mazenod அவர்கள், இரு நூற்றாண்டுகளுக்குமுன்னர் பெற்ற சிறப்பு அருளைச் சிறப்பிக்கும் அச்சபையினர், அவர் விட்டுச்சென்ற மறைப்பணி கண்ணோட்டத்தில் நிலைத்திருக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
முந்தைய பொதுப் பேரவைகளை, நம்பிக்கை என்னும் தலைப்புக்கு அர்ப்பணித்திருந்த இச்சபையினர், இப்போது நடத்திவரும் பொதுப்பேரவையில் “ஒன்றிப்பில் நம்பிக்கையின் திருப்பயணிகள்" என்ற தலைப்பில் கருத்துப்பரிமாற்றம் செய்துவருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த தலைப்பு, இயேசுவின் சீடர்களாகவும், புனித Eugene de Mazenod அவர்களைப் பின்பற்றுகிறவர்களாகவும் இவ்வுலகில் பணியாற்றும் அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் கூறியுள்ளார்.
உலகில் எழுபது நாடுகளில் மறைப்பணியாற்றும் இச்சபையினர், இவ்வுலகின் சாலைகளில், ஏழைகள் மற்றும், புறக்கணிக்கப்பட்டோரோடு பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகளாக, தங்களின் வாழ்வுமுறைகளை மீண்டும் கண்டுணரும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, திருப்பயணிகள், நடைப்பயணிகள் ஆகிய இரண்டும் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு சென்றதைப்போல செல்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதைக் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு நர்செய்தி அறிவிக்கையில் அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கண்டுணருமாறு பரிந்துரைத்த திருத்தந்தை, திருஅவை மற்றும், உலகிற்கு, ஏழைகள், நம்பிக்கையின் வழியைக் கற்றுக்கொடுக்கின்றனர் என்றும், அமலமரி தியாகிகள் சபையின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.
டுவிட்டர் செய்தி
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 03, இத்திங்களன்று, படைப்பின் காலம் (#SeasonOfCreation) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியிலும், இப்பூமிக்கோளத்தைப் பாதுகாக்கும் வழிகளைத் தேடும் நாம் துன்புறுவோரையும் மறக்கக்கூடாது எனவும், மனிதரைக் கொல்லுகின்ற மாசுகேடு கார்பன்டை ஆக்சைடு மட்டுமல்ல, நம் பூமிக்கோளத்தைப் பயங்கரமாய்ச் சேதப்படுத்தும் சமத்துவமின்மையும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்