கடவுளின் அன்பை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. - திருத்தந்தை
மெரினா ராஜ் -வத்திக்கான்
நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்ற (1 யோவான் 4:10). திருவிவிலிய வார்த்தைகளை மேற்கோள்காட்டிக் கடவுளின் அன்பு பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 28 வெள்ளி திருத்தூதர்களான சீமோன் மற்றும் யூதா திருவிழாவினைத் திருஅவை நினைவு கூர்கின்ற வேளையில் கடவுளின் அன்பை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்பதை அக்குறுஞ்செய்தி வழியாக வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை .
நமதுத் திறமைகளும் தகுதிகளும் நமது நம்பிக்கைக்கு மையம் மட்டுமல்ல, கடவுளின் நிபந்தனையற்ற, எல்லையற்ற மற்றும் சுதந்திரமான அன்பின் வெளிப்பாடு என்பதையும் திருத்தந்தை அக்குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், வத்திக்கானில் "அத் லிமினா" சந்திப்பையொட்டி தன்னைக் காண வந்த பிரேசில் நாட்டு ஆயர்களை சந்தித்தார் திருத்தந்தை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயர்கள் மேற்கொள்ளும் இப்பயணமானது உரோம் நகரில் உள்ள புனித பேதுரு பெருங்கோவில், புனித இலாத்தாரன் பெருங்கோவில், மேரி மேஜர் பெருங்கோவில், புனித பவுல் பெருங்கோவில் போன்ற மிக முக்கியமான கோவில்களில் நிறைவேற்றும் திருப்பலிகளை மையமாகவும், புனித பேதுரு மற்றும் புனித பவுல் கல்லறைகளில் செபிப்பதையும், திருத்தந்தையைச் சந்தித்துத் தங்களது மறைமாவட்டத்தின் ஐந்தாண்டு அறிக்கையை வழங்குவதையும் முக்கியமாகக் கொண்டுள்ளது.
ஐந்தாண்டு அறிக்கை என்பது ஒரு மறைமாவட்டத்தின் நிலை குறித்த விரிவான அறிக்கையாகும். உள்ளூர் தலத்திரு அவையின் வழிபாடு மற்றும் புனித வாழ்க்கை, கத்தோலிக்கக் கல்வி, நற்செய்தி, தகவல் தொடர்பு, திருஅவையின் சமூகப் போதனை உட்பட பல பகுதிகளில் ஆயர்கள் மற்றும் மறைமாவட்டத்தின் செயல்பாடுகள் பற்றியப் புதுப்பித்தலை திருத்தந்தை மற்றும் வத்திக்கானுக்கு வழங்குவதே இந்த அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்