திருத்தந்தை: உக்ரைனில் இடம்பெறும் வன்முறைப் புயல் முடிவுற..
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, இவ்வாரத்தில் இரஷ்யாவின் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களால் அந்நாட்டில் துன்புறுவோர் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என்று, அக்டோபர் 12, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைனில் இடம்பெறும் வன்முறைப் புயல் முடிவுறவேண்டும் என்று மிக உருக்கமாக கூறியத் திருத்தந்தை, போரைப் புறந்தள்ளி, நீதியில் அமைதியான நல்லிணக்க வாழ்வை ஏற்குமாறு அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்..
உக்ரைனின் மேற்குப் பகுதியிலுள்ள பல நகரங்களில், இரஷ்யா மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருக்கும் இந்நேரத்தில், அத்தாக்குதல்களால் துயருறும் மக்களுக்காகச் செபிக்குமாறும், நாடுகள் அமைதிக்கான வழிகளைத் தேடுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரேனியர்களை, குறிப்பாக, குண்டுவீச்சுத் தாக்குதல்களால் சிதைக்கப்பட்டுள்ள இடங்களில் வாழ்கின்ற மக்களை இந்நாள்களில் என் இதயத்தில் வைத்துள்ளேன், அவர்களின் வேதனையை என் இதயத்தில் தாங்கியுள்ளேன் என்றுரைத்த திருத்தந்தை, தம்மிடம் இறைஞ்சுவோரின் அழுகுரலை கடவுள் எப்போதும் கேட்கிறார் என்றும், இறையன்னை வழியாக அம்மக்களை, ஆண்டவரிடம் அர்ப்பணிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
அக்டோபர் 11, இச்செவ்வாயன்று திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களின் திருநாளைச் சிறப்பித்த நாம், ஆன்மாக்களின் மீட்பு மற்றும், உலகின் அமைதிக்காக மிகுந்த அக்கறையோடு பணியாற்றிய அத்திருத்தந்தையிடம், போர்களினால் துன்புறுவோருக்காகவும், உலகில் அமைதி நிலவவும் வேண்டுவோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்