திருஅவை, அனைவருக்கும் திறந்தமனதுள்ளதாய் இருக்குமாறு செபிப்போம்.

என்றும் பிரமாணிக்கத்துடனும், துணிவுடனும் நற்செய்தியை அறிவிக்கும் திருஅவை, ஒற்றுமை, உடன்பிறந்த உணர்வு மற்றும், வரவேற்கும் சமூகமாகத் திகழவும், என்றும் ஒன்றிப்புச் சூழலில் வாழவும் வேண்டும் என்று மன்றாடுவோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒவ்வொருவரும் தங்களின் பன்மைத்தன்மையில் ஒருவர் ஒருவருக்குச் செவிமடுக்கவும், திருஅவைக்கு வெளியே இருப்பவர்களுக்கு கதவுகளைத் திறந்துவிடவும் வேண்டும் என, திருஅவையின் உறுப்பினர்களுக்கு, இத்திங்களன்று அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மாதமும் தன் பொதுக் கருத்தை காணொளி வழியாக விளக்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அக்டோபர் மாதப் பொதுக்கருத்து குறித்த காணொளியில் இவ்வாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

வத்திக்கானில் 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பயணம் என்ற உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள், உலக அளவில் இடம்பெற்றுவரும்வேளை,  உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி அக்காணொளியில் விளக்கியுள்ள திருத்தந்தை, ஒன்றுசேர்ந்து நடத்தல், செவிமடுத்தல் ஆகியவை பற்றிய தன் எண்ணங்களை எடுத்துரைத்துள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின், மறைமாவட்டங்கள் அளவிலான முதல்நிலை தயாரிப்புக்களை முடித்து, கண்டங்கள் அளவிலான இரண்டாவது நிலை தயாரிப்புகள் தொடங்கப்பட்டுள்ள இவ்வேளையில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, அம்மாமன்றம், வாக்குச்சாவடி அல்ல, கருத்துக்களைச் சேகரிக்கும் நிகழ்வோ, அல்லது பாராளுமன்றத்தை நடத்துவதோ அல்ல, மாறாக, உண்மையிலேயே செவிமடுத்தல் பற்றியதாகும் என்று கூறியுள்ளார். 

தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுப்பதில் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கவும், அதன் வழியாக, கடவுளின் பாணிக்கு நெருங்கிவருகின்றவர்களாக மாறவும், தோழமை, உடன்பிறந்த உணர்வு, வரவேற்பு ஆகியவற்றின் இடமாக திருஅவை மாறவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறைவேண்டலின்றி, உலக ஆயர்கள் மாமன்றம் கிடையாது என்றுரைத்து, அம்மாமன்றத்திற்கு செபம் முக்கியம் என்று அக்காணொளியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, என்றும் பிரமாணிக்கத்துடனும், துணிவுடனும் நற்செய்தியை அறிவிக்கும் திருஅவை, ஒற்றுமை, உடன்பிறந்த உணர்வு மற்றும், வரவேற்கும் சமூகமாகத் திகழவும், என்றும் ஒன்றிப்புச் சூழலில் வாழவும் வேண்டும் என்று மன்றாடுவோம் என்று கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2022, 14:24