பெண்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
தீர்மானம் எடுக்கும் நிகழ்வுகளில் பெண்களை ஈடுபடுத்தினால், கடுந்துயரங்களை ஏற்படுத்தக்கூடிய பல தீர்மானங்கள் தவிர்க்கப்படலாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 27, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
பெண்களிடம் பெரிய பதவிகளும், பொறுப்புகளும் ஒப்படைக்கப்படவேண்டும், தீர்மானம் எடுப்பதில் பெண்களை ஈடுபடுத்தினால், பேரிடர்களை ஏற்படுத்தக்கூடிய பல தீர்மானங்கள் தவிர்க்கப்படலாம், பெண்கள் மதிக்கப்படுவது, அங்கீகரிக்கப்படுவது, மற்றும், ஈடுபடுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு நம்மை அர்ப்பணிக்கின்றோம் என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
யுனெஸ்கோவில் கருத்தரங்கு
“மனித சமுதாயத்தின் முழுமையான முகம்: ஒரு நீதியான சமுதாயத்திற்காக தலைமைத்துவத்தில் பெண்கள்” என்ற தலைப்பில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனமும், யுனெஸ்கோவிற்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் அலுவலகமும் இணைந்து அக்டோபர் 27, இவ்வியாழன், 28, இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில் பாரிஸ் நகரில் யுனெஸ்கோவின் தலைமையகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடத்தி வருகிறது. இதில் உலகமனைத்திலுமிருந்தும் முப்பதுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
பெண்களை மையப்படுத்திய இக்கருத்தரங்கையொட்டி, பெண்கள், உலகளாவிய காரித்தாஸ் (#Women, @iamcaritas) ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன், திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
FABC நிறைவு நிகழ்வில் கர்தினால் தாக்லே
மேலும், தாய்லாந்தின் ஹாங்காக் நகர் பேராலயத்தில் அக்டோபர் 30, வருகிற ஞாயிறன்று நடைபெறும் FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பொன்விழா நிறைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, தனது பிரதிநிதியாக, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் மற்றும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவராகிய கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் தாக்லே அவர்களும், மடகாஸ்கர் நாட்டு ஆயர்களும், பஹ்ரைன் நாட்டு புதிய தூதர் Muhammad Abdul Ghaffar அவர்களும், இவ்வியாழன் காலையில் திருத்தந்தையை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்