இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் வழிபாடு இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் வழிபாடு 

பஹ்ரைனில் 4வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

மனாமாவின் இயேசுவின் திருஇருதய ஆலயமான, “அன்னை ஆலய”த்தில் பலமொழி மற்றும், பல இனங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் ஒரே குடும்பம் என உணர்வதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளேன் - கிறிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 06, இஞ்ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு நாள். திருத்தந்தை, தனது 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, நவம்பர் 03, இவ்வியாழனன்று பஹ்ரைன் வளைகுடா நாட்டில் தொடங்கிய நான்கு நாள்கள் கொண்ட பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்துள்ளது. பஹ்ரைனின் அவாலியில் திருத்தந்தை தங்கியிருந்த திருத்தூது நிர்வாகத் தலைமையகத்தில் இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 6.30 மணிக்கு தனியாக திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை. பின்னர், அத்தலைமையகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றிசொல்லி, பெரிய விருந்துகளின்போது தண்ணீர் வைக்கப் பயன்படுத்தப்படும், அழகிய கலைவேலைப்பாடுகளாலான வெள்ளிப் பாத்திரம் ஒன்றை அவ்வில்லத்திற்கு அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை. அதற்குப் பின்னர் அங்கிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் மனாமா நகரில் அமைந்திருக்கின்ற இயேசுவின் திருஇருதய ஆலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு இந்திய இலங்கை நேரம், பகல் 12 மணியளவில் பஹ்ரைனின் மனாமாவிலுள்ள இயேசுவின் திருஇருதய ஆலயத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், மேய்ப்புப்பணிக்கு உதவுவோர் ஆகிய எல்லாருக்கும் திருவழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றினார். பாடலோடு தொடங்கிய இவ்வழிபாட்டில், முதலில் வட அரேபியாவின் திருத்தூது தலைமை நிர்வாகி ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். ஆயர் உரையாற்றியதற்குப்பின்னர், மேய்ப்புப் பணியாளர்கள் CHRIS NORONHA, அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருள்சகோதரி ரோஸ் செலின் ஆகிய இருவரும் தங்களின் அனுபவங்களைத் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர்.

CHRIS NORONHA பகிர்வு

இயேசுவின் திருஇருதய ஆலயத்தில்  திருத்தந்தை
இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் திருத்தந்தை

பஹ்ரைனிலேயே பிறந்து வளர்ந்துள்ள நான், மனாமாவின் இயேசுவின் திருஇருதய ஆலயமான, “அன்னை ஆலய”த்தில் பலமொழி மற்றும், பல இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பமாக உணர்வதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளேன், எங்களின் மேய்ப்புப்பணி அருள்பணியாளர்கள் அடிக்கடி மாறினாலும் எல்லாருமே எங்கள் மீது அக்கறையோடு பணியாற்றுகின்றனர். அமைதி, மற்றும், நன்மனத்தின் தூதராக, தாங்கள் உலக அளவில் பயணங்களை மேற்கொள்வதற்கு நன்றி. தங்களைப் போன்றே நாங்களும், நம்பிக்கையின் மெழுகுதிரிகளை எரியவிடும்போது, சிறந்த மற்றும், ஒளிமயமான வருங்காலத்தில் வைத்துள்ள நம்பிக்கையில், எங்களது சொற்கள், செயல்கள், செபங்கள் என அனைத்திலும், அமைதியைத் தேடுகிறோம். எமக்காகச் செபியுங்கள், நாங்களும் தங்களுக்காகச் செபிக்கின்றோம் என உறுதி கூறுகிறோம்.

இவ்வாறு கிறிஸ் பகிர்ந்துகொண்டபின்னர், அருள்சகோதரி ரோஸ்லின் செலின் அவர்களும், தங்களது சபை முதலில் குவைத்தில் பணியைத் தொடங்கியது.  பின்னர் 2003ஆம் ஆண்டில் “புன்னகைகளின் நிலம்” எனப்படும் பஹ்ரைனில் வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நாட்டிலும் பணியாற்றுகின்றோம். சிறைப்பணி குறிப்பாக பெண் கைதிகளுக்குப் பணி, இளையோர் பணி உள்ளிட்ட தலத்திருஅவையின் பல்வேறு மறைப்பணிகளுக்கும் உதவி வருகின்றோம் என்று கூறி, திருத்தந்தையின் ஆசிரை வேண்டினார். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் உரையை இத்தாலியத்தில் ஆரம்பித்தார்.

அருள்சகோதரி ரோஸ் ஆற்றிவரும் சிறைப்பணிக்கு நன்றி

இவ்வுரையில், அருள்சகோதரி ரோஸ் ஆற்றிவரும் சிறைப்பணி பற்றிக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்சிறந்த பணியாற்றும் அவருக்கு நன்றி. கைதிகள் போன்று, தேவையில் இருக்கின்ற நம் சகோதரர்கள் எங்கு இருக்கின்றார்களோ அங்கே ஒவ்வொரு மனிதரிலும் காயமடைந்த இயேசுவே துன்புறுகிறார். சிறையில் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், இங்கு ஏன் அவர்கள், ஏன் நான் இல்லை? என்று சிந்திப்பதுண்டு. அது கடவுளின் கருணை. கைதிகளைப் பராமரிப்பது, அனைவருக்கும் மனித சமுதாயம் முழுவதற்கும் நல்லது. ஏனெனில் சிறியோராகிய இவர்கள் நடத்தப்படும் முறை, ஒரு சமுதாயத்தின் மாண்பு மற்றும், நம்பிக்கையின் அளவுகோல் என்று இவ்வுரையில் திருத்தந்தை குறிப்பிட்டார்.

எத்தியோப்பியா, உக்ரைனுக்காக செபம்

இயேசுவின் திருஇருதய ஆலயத்தில்  திருத்தந்தை
இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் திருத்தந்தை

மேலும், அன்புச் சகோதரர் சகோதரிகளே, இந்த மாதங்களில் அமைதிக்காக மிகவும் உருக்கமாகச் செபித்து வருகிறோம். எத்தியோப்பியாவில் கையெழுத்திடப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் அந்நாட்டின் நம்பிக்கையை குறிக்கின்றது. நிலைத்த அமைதி நிலவ இதற்கு அனைவரும்ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்வழியாக இதில் ஈடுபட்டுள்ளவர்கள், கடவுளின் துணையோடு, உரையாடலின்  பாதையைத் தொடர உதவும். அந்நாட்டு மக்களும், மீண்டும் அமைதி மற்றும், மாண்புள்ள வாழ்வை விரைவில் கண்டுகொள்வார்கள். மேலும், போரினால் சிதைந்துபோயுள்ள உக்ரைனுக்காகவும் செபிக்க விரும்புகிறேன். அந்நாட்டில் போர் முடிவுறும்வண்ணம், அந்நாட்டுக்காகவும் செபியுங்கள்.

இவ்வாறு தன் உரையில் கேட்டுக்கொண்டு, மூவேளை செபத்தை எல்லாருடனும் சேர்ந்து செபித்து தன் ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செப வழிபாட்டை முடித்து, மனாமா திருஇருதய ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க புத்தகத்தில், நான் இங்குச் சந்தித்த சகோதரர் சகோதரிகளின் முகங்கள் மற்றும், கதைகளை என் இதயத்தில் கொண்டுசெல்கிறேன் மற்றும், ஆண்டவரிடம் ஒப்படைக்கிறேன். ஒற்றுமை மற்றும், அமைதியின் கனிகளால், தூய ஆவியாரின் மகிழ்வை அவர்களின் இதயங்களில் நிரப்புவாராக என திருத்தந்தை எழுதினார்.

பின்னர் அவ்வாலயத்தின் அருள்பணியாளர் இல்லத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, இத்திருத்தூதுப் பயண தயாரிப்புக் குழுவின் தலைவரான  பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் பாரசீக வளைகுடாப் பகுதியின் மற்ற பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்களில் ஒரு சிறிய கத்தோலிக்க குழுவையும் திருத்தந்தை சந்தித்துப் பேசினார். இதயத்தின் புன்னகையை இழக்காமலிருக்குமாறு அவர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2022, 16:38