இருள்படர்ந்த சூழலில் நம்பிக்கையின் விளக்கை ஏற்றுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கிறிஸ்தவர்கள், இருள்படர்ந்த சூழலுக்கு மத்தியில் நம்பிக்கையின் மெழுகுதிரிகளை எரியவிடவேண்டும் என்று, நவம்பர் 13, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட ஆறாவது உலக வறியோர் நாளுக்கென்று வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு இத்தாலி நேரம் காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் வறியோர், தன்னார்வலர்கள் உட்பட ஏராளமான கத்தோலிக்கருக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்துள்ள மக்களின் வேதனைக் குரலுக்கு கிறிஸ்தவர்கள் செவிமடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இயேசு கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்” (காண்க.2கொரி.8,9) என்ற தலைப்பில் 6வது வறியோர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டவேளை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (லூக். 21:5-19), வழிதவறி நடத்திச்செல்லாதபடி விழிப்பாயிருங்கள், சான்று பகருங்கள் என்ற இயேசுவின் இரட்டை அறிவுரைகளை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
போர்கள், கடும்எதிர்ப்புகள், நிலநடுக்கங்கள், தொற்றுநோய்கள் போன்ற பயங்கரமான நிகழ்வுகள் நடைபெறும்போது மிதமிஞ்சி கவைலப்படவேண்டாம் என இயேசு தம் சீடர்களிடம் கூறினார் எனவும், உலகின் நிகழ்வுகள் நம்மை அச்சுறுத்தும்போது தோல்வியில் துவண்டுவிடவேண்டாம் என நினைவுபடுத்துவதாக, வரப்போகும் கேடுபற்றிய இயேசுவின் வார்த்தைகள் உள்ளன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
தோல்வியை ஏற்கும் மனநிலையை எதிர்த்தல்
வரப்போகும் கேடுகள் குறித்த மூடநம்பிக்கை, அல்லது, அவை குறித்த பொதுவான அச்சம், கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு எதிராக எழுப்பும் சோதனையை எதிர்க்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் சீடர், கடும் இக்கட்டான சூழல்களிலும்கூட மனச்சோர்வுக்கு இடமளிக்கக்கூடாது, ஏனென்றால், நம் கடவுள், உயிர்ப்பு, மற்றும், நம்பிக்கையின் கடவுள் என்றும், அவர் எப்போதும் நம்மை உயர்த்துகின்றவர் என்றும், அவரோடு நம் பார்வையை உயர்த்தமுடியும் மற்றும், புதிய வாழ்வைத் தொடங்கமுடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அதேநேரம், துன்ப துயரங்களை எதிர்கொள்ளும்போது, என்ன நன்மை என்னால் செய்ய முடியும்? என கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பவேண்டும் எனவும் திருத்தந்தை கூறினார்.
சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுதல்
சான்று பகர்தல் குறித்த இயேசுவின் இரண்டாவது அறிவுரை பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயர நேரங்கள், நம்மையே நாம் பரிசோதித்துப் பார்க்க உண்மையிலேயே ஒரு வாய்ப்பாக உள்ளன எனவும், ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் தனித்துவமான சூழலை எதிர்கொள்கின்றார், ஆயினும், நெருக்கடிக்கு மத்தியிலும் ஒவ்வொருவரும் ஏதாவது நன்மை செய்ய வாய்ப்பைக் கொண்டிருக்கிறார் எனவும், ஒவ்வொரு நெருக்கடியும் செயல்படவும், வளர்வதற்குமான வாய்ப்புக்களை வழங்குகின்றது எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
அகச் செவித்திறனின்மை
துயரநேரங்களில் சோர்ந்துவிடுவதற்குப் பதிலாக, அவற்றை, நற்செய்திக்குச் சான்றுபகர்வதற்குள்ள ஒரு வாய்ப்பாக மாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோர் வேதனையோடு அழுவதைக் கேட்காமல் நம் மனதைக் கல்லாக்கிக் கொள்ளும் நிலையிலிருந்து வெளிவரவேண்டும் என இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் வழியாக இயேசு கூறுகிறார் என்றார்.
உக்ரைனில் இடம்பெறும் போர் போன்று நம் காலத்தில் இடம்பெறும் போர்கள், பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறக் காரணமாகியுள்ளன, மற்றும், எந்தவொரு பிரச்சனையிலும் அதிகம் பாதிக்கப்படுவோர் ஏழைகளே என்றுரைத்த திருத்தந்தை, நம் இதயம், செவிகொடாமலும், அலட்சியமாகவும் இருந்தால், அவர்களின் வேதனைக் குரலை நம்மால் கேட்கமுடியாது, அவர்களோடு சேர்ந்து அழ முடியாது., அவர்களுக்காக வாழ முடியாது, மற்றும், நம் நகரங்களின் மறக்கப்பட்ட இடங்களில் எவ்வளவு வேதனையும் துயரமும் மறைந்திருக்கின்றன என்பதை நம்மால் பார்க்க இயலாது என்று கூறியுள்ளார்.
இருளில் நம்பிக்கையின் மெழுகுவர்த்திகளை ஏற்றுவோம்
எனவே இருளில் நம்பிக்கையின் மெழுகுவர்த்திகளை ஏற்றுவோம், கடுந்துயரங்கள் நிறைந்த சூழல்களில் மகிழ்வின் நற்செய்திக்குச் சான்றுபகரும் மற்றும், உடன்பிறந்த உணர்வை அதிகமாகக்கொண்ட ஓர் உலகைக் கட்டியெழுப்பவும் வாய்ப்புக்களைத் தேடுவோம் என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும், அமைதியை ஏற்க, நம் தந்தையாம் கடவுளின் கரங்களில் வலிமையைக் காண்போம், ஏழைகளைப் பராமரிப்போம், ஏனெனில் நமக்காக ஏழையான இயேசுவை இவர்களில் காண்கின்றோம் என்று தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்