திருத்தந்தை: அருள்பணியாளர்கள் இடைவிடாமல் செபிக்கவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
செபிக்காத அருள்பணியாளர்கள், தரம் குறைந்தவர்களாக, சாதாரணமானவர்களாக வாழ்கின்றவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க அருள்பணித்துவப் பயிற்சிக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும், பேராசிரியர்களிடம் கூறியுள்ளார்.
நவம்பர் 10, இவ்வியாழனன்று, வத்திக்கானில் இவர்களைச் சந்தித்தபோது, இவர்களுக்கென்று தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலத்தின் சூழலுக்கேற்ப மாற்றம்பெற திறனற்ற அருள்பணித்துவப் பயிற்சிக் கல்லூரிகள் குறித்து எச்சரிக்கைவிடுத்தார்.
அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், அடிக்கடி செபிக்க கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, வருங்கால அருள்பணியாளர்களை உருவாக்கும் குருத்துவக் கல்லூரிகளில் நிலவும் இறுக்கமான சூழலின் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கைவிடுத்ததோடு, நான்கு நெருக்கமான வழிகள் குறித்து எடுத்துரைத்தார்.
நெருக்கமாக இருப்பதன் அவசியம்
இறைவேண்டலில் கடவுளோடு நெருக்கம், தலஆயரோடு நெருக்கம், அருள்பணியாளர்களுக்கு இடையே நெருக்கம், இறைமக்களோடு நெருக்கம் ஆகிய நான்கு வகை நெருக்கங்கள் குறித்து விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
செபிக்காத ஓர் அருள்பணியாளர், குப்பைத் தொட்டிக்குள் தன்னை வைக்கிறார் எனவும், ஒருவேளை அவர் வயதாகும்வரை அப்படியே இருந்தால், தரம்குறைந்தவராக, மற்றும், சாதாரணமானவராக இருப்பார் எனவும் கூறியத் திருத்தந்தை, கனமான பாவம் உங்களை பயமுறுத்தினால் ஒப்புரவு அருளடையாளத்திற்குச் செல்வீர்கள், ஆனால் செபிக்காத அருள்பணியாளர் தரம் குறைந்தவராக நோக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயரோடு நெருக்கம்
இரண்டாவதாக, மறுவார்த்தைக்கே இடமில்லாததாகிய ஆயரோடு நெருக்கம் என்பது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒருவேளை ஆயர், வேண்டப்படாதவராக இருக்கலாம், ஆனால் அருள்பணியாளரும் அத்தகையவரே, எனவே இவ்விரு தரப்பினரும் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வார்கள் என்று கூறினார்.
ஆயர், அருள்பணியாளர்களின் தந்தை, எனவே அவரை அவ்வாறே நோக்கி அவரோடு உடனிருக்கவேண்டும் என்றும், நீங்கள் விரும்பிய பங்குத்தளத்தைப் பெறுவதற்காக, ஆயரை முகத்துதி செய்யக்கூடாது என்றும் உரைத்த திருத்தந்தை, ஆயரைத் தந்தையாக உணர்ந்து அவரோடு சேர்ந்து தெளிந்துதேர்வுசெய்யவேண்டும் என்று அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
அருள்பணியாளர்களுக்கிடையே நெருக்கம்
அருள்பணியாளர்களாகிய நம்மிடம் இருக்கின்ற மிக கேவலமான தீய குணத்தில் ஒன்று புறணிபேசுதல் எனவும், மற்ற அருள்பணியாளர்கள் குறித்து மோசமாகப் பேசுகிறோம், ஆனால் அவர்கள் உங்கள் சகோதரர்கள் எனவும், திருஅவையிலும் எல்லா இடங்களிலும் அதிகமான புறணிபேசுதல் இருக்கின்றது எனவும், நாம் அவ்வாறு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டாம், ஏனென்றால் அது நம் வாழ்வை அழிக்கின்றது எனவும் எச்சரிக்கைவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இறை மக்களிடம் நெருக்கம்
அருள்பணியாளர்கள் தங்களின் பங்குத்தள மக்களிடமும் இறை மக்களிடமும் நெருக்கமாக இருக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை மறந்து, மேம்போக்காக வாழ்கின்ற அருள்பணியாளர்களைப் பார்த்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
உன் பாட்டி மற்றும் உன் தாயை நினைவில்கொள் என புனித பவுல் திமொத்தேயுவிடம் கூறியிருப்பதுபோல, நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை நினைத்துப் பார்த்து, தங்களின் பங்குத்தள மக்களை மறக்கக் கூடாது என்று அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இளம் குருத்துவ மாணவர்களுக்கு இதனைக் கற்றுக்கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
இவ்வாறு குருத்துவப் பயிற்சியிலுள்ள இறுக்கமான நிலையின் ஆபத்துக்கள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்னைவிட உனக்கு அதிகம் தெரிந்திருக்கிறதோ என்ற மனநிலை, இன்று திருஅவை எதிர்கொள்ளும் கடுமையான சோதனைகளில் ஒன்று எனவும், துறவு இல்லங்களில் இந்தப் போக்கு பேரிடரையே உருவாக்குகின்றது எனவும் எச்சரிக்கைவிடுத்தார்.
இக்காலத்தில் இளையோரின் கேள்விக்கு அந்தந்த நேரத்தில் கொடுக்கின்ற பதில்கள் அல்ல, சான்று வாழ்வே தேவைப்படுகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலத்தீன் அமெரிக்க குருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள், மற்றும், பயிற்சியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்