ஒன்றுபடுங்கள், ஒத்துழையுங்கள், இணைந்திருங்கள் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க ஒன்றுபட்டு செயல்படுங்கள், ஒத்துழையுங்கள், இணைந்திருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 26 சனிக்கிழமை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் இத்தாலிய மத்திய குற்றத்தடுப்பு அமைப்பினர் ஏறக்குறைய 130 பேரை சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்த்துப் போராட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதை இவ்வாண்டின் கருப்பொருளாகக் கொண்டிருக்கும் அவ்வமைப்பினருக்கு ஒன்றுபட்டு, ஒத்துழைப்புடன் செயல்படவும் தற்காப்பு வலைப்பின்னல் அமைப்பாக மட்டுமல்லாமல், தடுப்பு வலைப்பின்னல் அமைப்பாகவும் செயல்படவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாளுக்கு அடுத்த நாள், நவம்பர் 26 அன்று இவ்வமைப்பினரை சந்தித்து, அவ்வமைப்பில் பணிபுரியும் பெண் அதிகாரிகளைப் பாராட்டிய திருத்தந்தை, பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை பெண் அதிகாரிகள் சரிசெய்ய முன்வரும் போது இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்க, அருகில் இருக்க, ஆன்மீக ஆதரவை அவர்களுக்குக் கொடுக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
கல்வி மற்றும் ஊடகங்கள் வழியாக....
தங்களது உடனிருப்பால் சான்று வாழ்வு வாழ்ந்து சிறப்பான செயல்களை ஆற்றுவதற்கு பின்வாங்காமல் துடிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், சிறந்த கல்வியின் வழியாக பொருளாதார நெருக்கடி, மற்றும் பெருந்தொற்றின் கட்டாய தனிமைப்படுத்தலினால் மக்கள் மனதில் ஏற்பட்ட துன்பங்களையும் உளவியல் சிக்கல்களையும் தீர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகள் குடும்பங்களை அதிகமாக பாதித்துள்ளதால், அக்குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் குழப்பங்களும் சிக்கல்களும் நாட்டில் ஏற்படும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
வெற்றி, தன்னம்பிக்கை, மற்றும், மற்றவர்களை ஈர்க்கும் நல்திறன் பெற்ற ஊடகம், ஆதிக்கம் செலுத்தும் சக்தியால் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு தீய ஊட்டமளிக்கும் செய்திகளைத் தொடர்ந்து முன்மொழிவது தடுக்கப்பட வேண்டும் எனவும், தவறான செய்திகள், கண்ணீரை ஒருபோதும் துடைக்காது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
புனித ஜோசப்பின் பகிதா
இளம்வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பல்வேறு துன்பங்களை சந்தித்து நாடுகடத்தப்பட்டு இன்று புனிதராக போற்றப்படும் புனித ஜோசப்பின் பகிதா என்னும் ஆப்ரிக்க புனிதையின் சான்றுள்ள வாழ்வையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை
இயேசு பெண்கள் மீது அதிக அக்கறை கொண்டவர், மாண்போடு நடத்தியவர் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக தீர்வுகள் கொடுக்கப்படவும், கிறிஸ்துவின் இரக்கத்தால், மென்மையால் குணமடைந்து தங்கள் வாழ்வால் ஒவ்வொருவரும் சான்றுபகர வேண்டுமென்றும், அன்பு, இரக்கம், உடனிருப்பு, உடன்பிறந்த உறவு போன்றவை நம்மை அடிமைத்தனத்திலிருந்து காக்கும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்