திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் 98வது துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பினர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் 98வது துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பினர்  

அமைதியின் கைவினைஞர்களாக மாறுவோம். - திருத்தந்தை

அர்ப்பணிக்கப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த சமூகத்தில் தொடங்கி, சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுவர்களைக் கட்டாமல், பாலங்களைக் கட்டும் அமைதியின் கைவினைஞர்களாக இருக்க வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதி இயேசு தரும் பரிசு, அவரது கருணையின் பலன் என்றும், தன்னோடும், கடவுள், மனிதர், மற்றும் படைப்போடும் இணக்கம் ஏற்படுத்தும் அமைதியின் கைவினைஞர்களாக மாறுவோம் என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 26, சனிக்கிழமையன்று வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஒர் அறையில் 98வது துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

எல்லா மக்களும், குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அமைதியின் கைவினைஞர்களாக மாறவேண்டும் என்று அழைப்புவிடுத்த திருத்தந்தை, அமைதி நம் அனைவரையும் சகோதர சகோதரிகளைப் போல உணர வைக்கிறது எனவும், போரற்ற அல்லது போர் முடிவிற்கு வரும் சூழ்நிலையையே அமைதி மற்றும் நல்வாழ்வு நிலை என்று நாம் தவறாக நினைக்கின்றோம் எனவும் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

இயேசுவின் அமைதி

இயேசுவின் அமைதி  அவர் தரும் பரிசு, இரக்கத்தின் பலன் என்றும், தன்னோடும் கடவுளோடும் பிற மனிதர்களோடும் படைப்போடும் இணக்கமான உறவை ஏற்படுத்த உதவுவது என்றும், இரக்கத்தின் அனுபவம், மற்றும் மன்னிப்பின் பேறுபலனாக அமைதி விளங்குகின்றது எனவும், அனைத்து வகையான வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகளையும் நிராகரிப்பதற்கு உதவுவதும் அமைதியே என்றும் கூறினார் திருத்தந்தை. 

அமைதியை உருவாக்குதல் என்பது, ஒரு கைவினைச்செயலாகும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, காலத்திற்கும் நீடித்த செயல்முறையான இவ்வமைதியை  ஆர்வம், பொறுமை, அனுபவம், மற்றும் விடாமுயற்சியுடன் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கல்ல, மாறாக மனித வளர்ச்சிக்குத் தேவைப்படும் இந்த அமைதிக்கான செயல்முறைகள், அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தார் பொறுப்பு அல்ல, மாறாக அது தனிப்பட்ட ஒவ்வொருவரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார். 

அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றோர்

பணி, உடன்பிறந்த உறவு நிலை, உரையாடல், இரக்கச்செயல்கள் போன்ற நமது அன்றாட செயல்களில் அமைதியை விதைக்க, அர்ப்பணிக்கப்பட்ட நபர்களாக இருக்க,  செபத்தில் நிலைத்திருக்கவேண்டும் எனவும் வலியுறுத்திய திருத்தந்தை, அர்ப்பணிக்கப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த சமூகத்தில் தொடங்கி, சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுவர்களைக் கட்டாமல், பாலங்களைக் கட்டும் அமைதியின் கைவினைஞர்களாக இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொருவரும் தங்களது கடமையைச் சரியாகச் செய்யும்போது சமூகத்தில் அமைதி நிலவுகிறது எனவும், இத்தகைய அமைதியின் கைவினைஞர்களாக நாம் அர்ப்பணிக்கப்படுவதும் உலகிற்குத் தேவை எனவும் வலியுறுத்தினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2022, 12:35