திருத்தந்தை: ஆறுதல், ஆன்மிக வாழ்வுக்கு மிகச் சிறந்த கொடை

ஆன்மாவின் ஒளியாகிய ஆன்மிக ஆறுதல் கடவுளைப் பற்றி அறியவும், துன்பத்தில் இறைத்தந்தையைக் காணவும் உதவுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

85 வயது நிரம்பிய நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 23, இப்புதன் உரோம் நேரம் காலை எட்டு மணிக்கே இந்நாளைய தன் பணிகளைத் தொடங்கினார். வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில், கத்தோலிக்க, மற்றும், கிழக்குமரபு வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே இறையியல் உரையாடல் குழுவின் இணைத்தலைவரான காப்டிக் சபையின் பேராயர் Kyrillos, ஆங்லிக்கன் சபையோடு இணைந்துள்ள சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறையின் பேராயர் ஜோசப் பர்னபாஸ் ஆகியோரைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை, சீரோ மலங்கார பேராயர் ஜோசப் பர்னபாஸ்
திருத்தந்தை, சீரோ மலங்கார பேராயர் ஜோசப் பர்னபாஸ்

பின்னர் அதே அரங்கத்திலுள்ள மற்றோர் அறையில் கனடாவின் ஸ்கலாபிரினி பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் அமைப்பின் முப்பது பேரைச் சந்தித்து உரையாடினார். அதற்குப்பின்னர் இப்புதன் காலை 9.15 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் குறித்த தனது ஒன்பதாவது மறைக்கல்விப் பகுதியை இத்தாலியத்தில் தொடங்கினார். இந்நிகழ்வில் திருப்பாடல் 62லிருந்து மூன்று வசனங்கள் முதலில் வாசிக்கப்பட்டன.

உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். நெஞ்சே, கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன் (தி.பா.62,2-3,6).

புதன் மறைக்கல்வியுரை

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 231122
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 231122

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். தெளிந்துதேர்தலில் ஆன்மிக வறட்சி குறித்த பல்வேறு கூறுகளைத் தியானித்துவந்த நாம், அதற்கு மற்றுமொரு முக்கியமான கூறாகிய “ஆன்மிக ஆறுதல்” பற்றி இன்று சிந்திப்போம். இது மேலோட்டமாக ஏற்கப்படவேண்டியது அல்ல, ஏனெனில் இது தன்னிலே புரிந்துகொள்ளாமைக்கு இட்டுச்செல்லக்கூடும். ஆன்மிக ஆறுதல் என்றால் என்ன? இது எல்லாவற்றிலும் கடவுளின் இருத்தலைப் பார்ப்பதால் கிடைக்கின்ற உள்ளார்ந்த மகிழ்வை ஆழமாக அனுபவிப்பதாகும். இது, நம் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கை வலுப்படுத்துகிறது, நன்மைசெய்யவும்கூட சக்தியை அளிக்கிறது. தூய ஆவியாரின் கொடையாகிய இந்த ஆன்மிக ஆறுதல், சோதனை மற்றும், துன்பநேரங்களிலும்கூட, எல்லாவற்றிலும் கடவுளின் ஆறுதலளிக்கும் இருத்தலையும், பராமரிப்பையும் உணரச் செய்கிறது. ஏனென்றால், அதில் கிடைக்கின்ற மனஅமைதி, எவ்விதச் சோதனையையும்விட வலிமையானது என்பதை ஒருவர் எப்போதும் அனுபவிக்கின்றார். எனவே ஆன்மிக ஆறுதல், ஆன்மிக வாழ்வுக்கும், பொதுவாக, வாழ்வு அனைத்துக்குமே மிகச் சிறந்த கொடையாகும். ஆன்மிக ஆறுதல், நம் உள்ளத்தின் ஆழத்தில் நடைபெறுகின்ற இயக்கமாகும். இது, உள்ளாழத்தைத் தொடுகின்றது. புனித இலெயோலா இஞ்ஞாசியார், இதயம், திருவருளால் நிறைந்துள்ள ஓர் இயக்கத்தை, ஒரு கடற்பஞ்சில் விழும் நீர்த்துளிக்கு ஒப்பிடுகிறார். அமைதியாகவும், நம் சுதந்திரத்தை முழுவதும் மதிப்பதிலும் நடைபெறுகின்ற இந்த இயக்கத்தில், ஆண்டவர், அவரது குன்றாத அன்பில் நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும், உறுதியான பற்றுறுதியில் நம்மை உறுதிப்படுத்துகிறார். இஞ்ஞாசியார், எடித் ஸ்டைன், லிசியத் தெரஸ் போன்ற மாபெரும் புனிதர்களின் வாழ்வில், ஆன்மிக ஆறுதலின் அனுபவம், உள்மன அமைதி மற்றும், உறுதிப்பாட்டை மட்டுமல்ல, கடவுளின் பணியில் வியத்தகு காரியங்களை நிறைவேற்றவும் வலிமையை நல்குகின்றது. உண்மையான ஆன்மிக ஆறுதலின் அடையாளம், அது கொணரும் மனஅமைதி, பலனுள்ள மற்றும், நிலைத்த அமைதியாகும். போலியான, மேலோட்டமான, மற்றும், சுயவிருப்பம் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் ஆறுதல், உண்மையான ஆன்மிக ஆறுதல் அல்ல என்பதை, தெளிந்துதேர்வு செய்வதன் வழியாக கண்டுணரப்படவேண்டும். புனித பெர்னார்டினின் ஞானமுள்ள ஆலோசனைக்கேற்ப, நம் ஆன்மிகப் பயணத்தில் ஆறுதல்களின் கடவுளை அல்ல, மாறாக, கடவுளின் ஆறுதலைத் தேடுவதில் எப்போதும் கருத்தாய் இருப்போமாக. கடவுளே மிக அழகான கொடை என்பதை இழந்து, அவரோடு நமக்குள்ள உறவை, சிறுபிள்ளைத்தனமானதாக, நாம் பயன்படுத்துகின்ற மற்றும், நுகர்கின்ற ஒரு பொருளாகக் குறைக்கின்ற ஆபத்தை நாம் பலநேரங்களில் எதிர்கொள்கின்றோம்.

இறைவேண்டல் செய்ய அழைப்பு

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 231122
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 231122

இவ்வாறு உண்மையான ஆன்மிக ஆறுதலைத் தெளிந்து தேர்வுசெய்தலின் அவசியத்தை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவராம் கிறிஸ்துவின் மகிழ்வு மற்றும், அமைதி அனைவர் மீதும் பொழியப்படச் செபித்தார். மேலும், இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டோருக்காகவும், உக்ரைனில் அமைதி நிலவவும் அனைவரும் செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார். நவம்பர் 21, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட மீன்பிடித் தொழில் மற்றும் நீர் மேலாண்மை உலக நாளை நினைவுகூர்ந்து, அத்தொழிலாளரின் உரிமைகளை மதித்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்றும் கூறினார், திருத்தந்தை. போர்த்துக்கீசிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, வருகிற ஆண்டில் லிஸ்பனில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் பற்றிக் குறிப்பிட்டார் திருத்தந்தை. இளையோரைக் காண்பது மற்றும், அவர்களோடு இருப்பது ஆகியவை, முரண்பாடுகள் மற்றும் போர்களால் கிழிக்கப்பட்டுள்ள இன்றைய உலகுக்குத் தேவையான அடிப்படை அடையாளங்கள் ஆகும். ஒன்றிப்பு மற்றும், அமைதிக்காக ஏங்கும் நம் ஆவல்களை அன்னை மரியிடம் அர்ப்பணிப்போம் என்றார் திருத்தந்தை. போலந்து திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உலகில் சித்ரவதைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் சிவப்புவாரம் என்ற நிகழ்வில் கலந்துகொண்டு யஸ்ன கோரா அன்னை மரியா திருத்தலத்தில் செபிக்கும் அனைவரையும் வாழ்த்துவதாகத் தெரிவித்தார். இறுதியில், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2022, 13:15