இத்தாலிய மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு இத்தாலிய மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு  

திருத்தந்தை மாணவர்களிடம்: அமைதியின் கவிஞர்களாக மாறுங்கள்

“நவீன கால இறைவாக்கினர்களாகிய” திருத்தந்தை புனித 23ம் யோவான், மார்ட்டின் லூத்தர் கிங் ஆகிய இருவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். அவ்விருவர் போன்று பெரிய அளவில் கனவு காணுங்கள் – இத்தாலிய மாணவர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இளையோரே, அமைதி குறித்து கனவு காணுங்கள், ஏனெனில் இது அணு ஆயுத தாக்குதல் இடம்பெறும் நேரத்தில் மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் நம்மைச் சார்ந்துள்ள விவகாரம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இத்திங்களன்று கூறியுள்ளார்.  

அமைதி மற்றும், அக்கறை குறித்த கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், இத்தாலியின் அமைதிக்கான தேசிய பள்ளிகள் வலையமைப்பு நடத்துகின்ற கூட்டத்தில் பங்குகொள்கின்ற மாணவர்கள் மற்றும், ஆசிரியர்கள் என ஆறாயிரம் பேரை, நவம்பர் 28, இத்திங்களன்று வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அம்மாணவர்களை அமைதியின் கவிஞர்களாக மாறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை புனித 23ம் யோவான், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் ஆகிய இருவரின் முன்மாதிரிகையால் தூண்டப்பட்டவர்களாய், பெரிய அளவில் கனவு காணுங்கள் என்றும், அறுபது ஆண்டுகள் பழமையுடைய "Pacem in Terris" அதாவது அவனியில் அமைதி என்ற இக்காலத்திற்கேற்ற அத்திருத்தந்தையின் திருமடலை வாசியுங்கள் மற்றும், அது குறித்து ஆய்வுசெய்யுங்கள் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

அமைதியின் கருவிகளாக இருப்பதற்கு, போர்ஜெஸ், அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஆகிய இருவரையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனவு காண்பதற்கு, "நல்ல திருத்தந்தை"  என அழைக்கப்படும் திருத்தந்தை புனித 23ம் யோவான், மார்ட்டின் லூத்தர் கிங் ஆகிய இரு இறைவாக்கினர்களையும் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டிருங்கள் என்றும் கூறியுள்ளார்

பராமரிப்பு, அக்கறை

உலகில் போருக்கு மறுப்பு தெரிவித்து, அமைதிக்கு குரல் எழுப்பும் நபர்கள் பலர் உள்ளனர் எனவும், அமைதி என்பது, நம் சகோதரர், சகோதரிகள் மீது அக்கறை காட்டுவதில் கட்டியெழுப்பப்படவேண்டும் எனவும் கூறியத் திருத்தந்தை, நம் வீட்டருகில் போர் நடக்கும்போது, அல்லது அணு ஆயுத தாக்குதல் நடக்கக்கூடும் என்ற நிலையில் அச்சமுற்று அவ்வேளையில் அமைதி குறித்து பேசுகிறோம் என்று கூறியுள்ளார்.  

மேலும் புலம்பெயர்ந்த நம் உறவுகள் அல்லது நண்பர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்களுக்காகப் பரிந்துபேசுகிறோம், ஆனால் அமைதி என்பது, எப்போதும் நம் கவலைக்குரியதாய் உள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இத்தாலிய மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு
இத்தாலிய மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு

கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தம்

“அமைதிக்காக, அக்கறையோடு” என்ற இந்த அமைப்பின் கல்வித் திட்டம், மூன்று ஆண்டுகளுக்குமுன் தான் அழைப்புவிடுத்த கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திற்குச் செயலுருகொடுப்பதாக உள்ளது என்றும், இதனை கத்தோலிக்கப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுநல அமைப்புகளும், மற்ற மத நிறுவனங்களும் செயல்படுத்துவது மகிழ்ச்சி தருகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.  

"அமைதிக்காக அக்கறையோடு" என்ற இலக்குடன் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடையவிருக்கும் பெருஜியா-அசிசி பயண நடவடிக்கையில் பங்குபெறும் இம்மாணவர்களுக்கு தன் நல்வாழ்த்தையும் திருத்தந்தை தெரிவித்தார்.   

தேவையில் இருப்போரை பராமரிப்பதற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நல்ல சமாரியர் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள, திருத்தந்தை புனித 23ம் யோவான், மார்ட்டின் லூத்தர் கிங் ஆகிய இருவரின் சான்று வாழ்வு குறித்தும் எடுத்துரைத்தார்.

பெர்லின் சுவர் கட்டப்பட்ட நேரம், கியூப நெருக்கடி, பனிப்போர், அணு ஆயுத அச்சுறுத்தல் என, 1960களில் உலகில் கடும் பிரச்சனைகள் நிலவிய நேரத்தில் திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், புகழ்பெற்ற மற்றும், இறைவாக்குநிறைந்த, அவனியில் அமைதி என்ற திருமடலை வெளியிட்டார், அதன் 60ஆம் ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டில் சிறப்பிக்கப்படவுள்ளது, அமைதிக்காக உருக்கமுடன் விண்ணப்பித்த இத்திருமடல் காலத்திற்கேற்றது என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1964ஆம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின், “எனக்கொரு கனவு உள்ளது” என்ற புகழ்பெற்ற உரை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இனப்பாகுபாடு இடம்பெற்ற சமயத்தில் ஆற்றப்பட்டது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2022, 15:03