அசிசி கிளாரா ஆழ்தியான சபையினர் (121121) அசிசி கிளாரா ஆழ்தியான சபையினர் (121121) 

ஆழ்தியான சபையினர் செபம் வழியாக திருஅவைக்கு உதவுகின்றனர்

1953ஆம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் ஆழ்நிலை தியான சபையினர் உலக நாளை உருவாக்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஆழ்நிலை தியான துறவு சபையினர், இறைவேண்டல் மற்றும், தன்னொறுத்தல் வழியாக திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறியுள்ளார்.

“தனிமை, அமைதி, இறைவேண்டல், மறைவான தியாகம் ஆகியவை வழியாக, ஆழ்நிலை தியான சபைகள் திருஅவையின் வாழ்வுக்கு தாயன்போடு ஆதரவளித்து வருகின்றன” என்ற சொற்களை, நவம்பர் 21, இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 21, இத்திங்களன்று ஆழ்நிலை தியான சபையினர் உலக நாள் (Pro Orantibus Day: இறைவேண்டல் செய்பவர்களுக்காக) சிறப்பிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனிமையிலும், அமைதியிலும், இடைவிடா இறைவேண்டலிலும் விருப்போடு மேற்கொள்ளும் தன்னொறுத்தலிலும் தங்களை அர்ப்பணித்துள்ள ஆழ்நிலை தியான துறவு சபையினரின் உலக நாள், அன்னை மரியா மூன்று வயது சிறுமியாக இருந்தபோது எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவுகூரும் திருநாளான நவம்பர் 21ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வுலக நாளை திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் 1953ஆம் ஆண்டில் உருவாக்கினார்.   

கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத் துறையின் புதிய தலைவர்

பேராயர் Claudio Gugerotti
பேராயர் Claudio Gugerotti

இன்னும், கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத் துறையின் புதிய தலைவராக, இதுவரை பிரித்தானியாவில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் Claudio Gugerotti அவர்களை நவம்பர் 21, இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேலும், இத்திங்கள் காலை 9.30 மணிக்கு, வத்திக்கானின் பொலோஞ்ஞா அறையில், திருப்பீடத் துறைகளுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2022, 13:38