மனித உரிமை ஆர்வலர் Hebe de Bonafini மனித உரிமை ஆர்வலர் Hebe de Bonafini  

அர்ஜென்டீனா நாட்டு அன்னையர் அமைப்பினருக்கு திருத்தந்தை செய்தி

அர்ஜென்டினா மக்கள் கட்டாய மௌனத்தின் காலத்தில் வாழ்ந்தபோது, உண்மை, மற்றும் நீதிக்கான வீரத்துவத்துடன் போராடியவர் அன்னை Hebe de Bonafini.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

Plaza de Mayo என்னும் அர்ஜென்டீனா நாட்டு அன்னையர் அமைப்பின் நிறுவனர் Hebe de Bonafini அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அப்பிரிவால் துயருறும் அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனாவில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் காணாமல்போயுள்ளோரின் அன்னையர்க்காக, 1977ஆம் ஆண்டில் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகப் போராடி வந்த மனித உரிமை ஆர்வலர் Hebe de Bonafini அவர்கள், தனது 93வது வயதில் நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தையின் அனுதாபச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அர்ஜென்டீனா நாட்டில் நடைபெற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியின்போது காணாமல்போனவர்களின் குரலாக செயல்பட்ட அன்னை Hebe de Bonafini அவர்கள், வாழ்வில் ஓர  நிலைக்குத் தள்ளப்பட்ட,, மற்றும் எங்கிருக்கிறார்கள் என்பதே மறைக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் என பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2016ஆம் ஆண்டில் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் தனக்கும் அன்னை Hebe de Bonafini அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புக் குறித்தும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மக்கள் கட்டாய மௌனத்தின் காலத்தில் வாழ்ந்தபோது, உண்மை, மற்றும் நீதிக்கான இவரின் வீரத்துவம் உயிரோட்டமுடையதாக இருந்தது எனப் பாராட்டியுள்ளார்.

அக்கால அர்ஜென்டினாவின் அத்துமீறல் நடவடிக்கைகளால், அந்நாட்டின் வாழ்வும் வரலாறும் இருளுக்குள் மூழ்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், மற்றவர்களின் உரிமைகளுக்கான குரலாக ஒவ்வொரு வாரமும் அவர் நடத்திய ஊர்வலத்தையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனாவில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில், Hebe de Bonafini அவர்களின் காணாமல்போன இரு மகன்களும் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போரின்போது ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர், அல்லது காணாமல் போகவைக்கப்பட்டனர்.

மனித உரிமைகளுக்காக அயராது போராடிய Hebe de Bonafini அவர்கள் மரணமடைந்ததை முன்னிட்டு, அர்ஜென்டீனா நாட்டில் தேசிய அளவில் மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2022, 12:15