2006, மார்ச் 1ல் முஸ்லிம் பிரதிநிதிகளோடு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006, மார்ச் 1ல் முஸ்லிம் பிரதிநிதிகளோடு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்: முஸ்லிம்களோடு நல்லுறவு கொண்டிருந்தவர்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறையியல் தளத்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கு விட்டுச்சென்றுள்ள அனைத்தையும் வைத்து, அவர் ஒருநாள் திருஅவையின் வல்லுநராக அறிவிக்கப்படுவார்

மேரி தெரேசா: வத்திக்கான்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறையியல் தளத்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கு விட்டுச்சென்றுள்ள அனைத்தையும் வைத்து, அவர் ஒருநாள் திருஅவையின் வல்லுநராக அறிவிக்கப்படுவார் என்றும், அத்தகைய ஆழ்ந்த இறையியல் நிபுணத்துவம் உடையவர்கள் இக்காலத்தில் இல்லை என்றும் ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இச்சனிக்கிழமை காலையில் இறைத்தந்தையிடம் சென்றுள்ளதை முன்னிட்டு அவர் பற்றிய எண்ணங்களை ஆசியச் செய்தியிடம் பகிர்ந்துகொண்ட கர்தினால் சாக்கோ அவர்கள், இத்திருத்தந்தை, முஸ்லிம் உலகோடு ஆழ்ந்த உறவைக் கொண்டிருந்தார் என்றும், 2010ஆம் ஆண்டில் மத்தியக் கிழக்கு குறித்து ஆயர்கள் மாமன்றம் நடைபெறுவதற்கு ஆதரவளித்தார் என்றும் கூறியுள்ளார்.   

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இஸ்லாம் மதத்தவரோடு வைத்திருந்த உறவில் ஓர் இறைவாக்கினராக இருந்தார் என்றும், தெளிவான மற்றும், புரிந்துகொள்ளக்கூடிய முறையில் காரியங்களை வெளிப்படுத்திய மிகப்பெரும் இறையியலாளர் என்றும் கூறியுள்ளார், கர்தினால் சாக்கோ.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது தலைமைத்துவப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பதற்குமுன், அதே ஆண்டு சனவரியில் அத்திருத்தந்தை தன்னை பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தையாக நியமித்தார் என்றுரைத்துள்ள  கர்தினால் சாக்கோ அவர்கள், இத்திருத்தந்தை, ஒளிவீசும் முகத்தைக்கொண்டுள்ள கடவுளின் மனிதர் என்றும் அவர்மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.  

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஈராக் மக்களோடு ஆழ்ந்த உடனிருப்பைக் கொண்டிருந்தார் மற்றும், மனித உறவுகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தினார் என்றும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், கடந்த சில நாள்களாக இத்திருத்தந்தைக்காக ஈராக் திருஅவை திருப்பலிகள் நிறைவேற்றி செபித்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2022, 15:17