மியான்மாரில் தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் மியான்மாரில் தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயம்  

மியான்மாரில் அமைதியான தீர்வுகாண கர்தினால் போ அழைப்பு

மியான்மார் இராணுவ அரசால் ஒரு கல்வி நிலையம், ஒரு கோவில் உட்பட ஏறக்குறைய 200 கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மியான்மார் நாட்டின் இராணுவ அரசு, அந்நாட்டு எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடலுக்கு முன்வரவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், தலைநகர் யாங்கூன் பேராயர், கர்தினால் Charles Maung Bo.

மியான்மாரின் Sagaing பகுதியிலுள்ள கர்தினாலின் சொந்த கிராமமாகிய Mon Hlaவில் அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட கர்தினால் போ அவர்கள், இதில் 7 வயது சிறுவன் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளது மட்டுமல்ல, ஒரு கல்வி நிலையம், ஒரு கோவில் உட்பட ஏறக்குறைய 200 கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

மியான்மாரில் இடம்பெறும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகாண அந்நாட்டு இராணுவம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் போ.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவம், மக்களின் சனநாயக உரிமைகளைத் தொடர்ந்து அடக்கி வருவதுடன், கடந்த மாதம் பல கிறிஸ்தவ கிராமங்களைத் தாக்கி மக்களைக் கொலையும் செய்துள்ளது.(AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2022, 15:16