ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் தாழ்மையுள்ள பணியாளர்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் தாழ்மையுள்ள பணியாளராக விளங்கிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது 95வது வயதில் டிசம்பர் 31, இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
அன்பும், பாசமும், பண்பும், அறிவும், ஆன்மிகமும் நிறைந்த, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இம்மண்ணக வாழ்விலிருந்து இறுதி பிரியாவிடை அளிக்கும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 05, வருகிற வியாழன் உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நிறைவேற்றுவார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தான் தங்கியிருந்த வத்திக்கானில் Mater Ecclesiae துறவு இல்லத்தில், தனது 95வது வயதில் இச்சனிக்கிழமை காலை 9.34 மணிக்கு இறைத்தந்தையின் இல்லத்திற்குச் சென்றுவிட்டார் என திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல், சனவரி 2, வருகிற திங்கள் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் பொது மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும். எனவும், மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் அறிவித்தது.
2013ஆம் ஆண்டில் திருஅவையின் தலைமைப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததற்குப் பின்னர், Mater Ecclesiae துறவு இல்லத்தில் தங்கியிருந்தார். முதிர்வயதின் காரணமாக, கடந்த சில நாள்களாகவே இத்திருத்தந்தையின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. டிசம்பர் 28, இப்புதன் மாலையில் Mater Ecclesiae துறவு இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலிக்குப்பின்னர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நோயில்பூசுதல் அருளடையாளமும் வழங்கப்பட்டது.
மேலும், டிசம்பர் 28, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இத்திருத்தந்தைக்காகச் செபிக்குமாறு எல்லாரையும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்