திருவருகைக் காலம், ஆண்டவரை புதிய வழிகளில் அறிவதற்கு ஏற்றது

சிறார் தங்கள் வீட்டுக் குடில்களில் வைப்பதற்காகக் கொண்டுவந்திருந்த பாலன் இயேசு திருவுருவங்களை இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கடவுள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற நம் கற்பனையைக் கடந்தவராக அவர் எப்போதும் மகத்தானவராக இருக்கிறார் மற்றும், அவர் பற்றிய நம் கணிப்புகளைவிட அவரின் செயல்கள் நம்மை எப்போதும் வியப்படைய வைக்கின்றன என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 11, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பெருமளவான திருப்பயணிகளை, குறிப்பாக, சிறாரோடு வந்திருந்த குடும்பங்களை வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சிறார் தங்கள் வீட்டுக் குடில்களில் வைப்பதற்காகக் கொண்டுவந்திருந்த பாலன் இயேசு திருவுருவங்களையும் ஆசிர்வதித்தார்.

சிறார் தங்கள் வீட்டுக் குடில்களில் வைப்பதற்காகக் கொண்டுவந்திருந்த பாலன் இயேசு
சிறார் தங்கள் வீட்டுக் குடில்களில் வைப்பதற்காகக் கொண்டுவந்திருந்த பாலன் இயேசு

இந்தப் பழக்கமானது, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குமுன் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் தொடங்கப்பட்டது.

நம் சந்தேகங்களை மேற்கொள்ள

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.11,2-11) மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, திருமுழுக்கு யோவான் போன்று, நாமும் ஆண்டவர் யார் என்ற நம் புரிதலைப் புதுப்பிப்போம் என்றும், கடவுளின் இரக்கம் மற்றும், கனிவன்பால் வியப்படைவோம் என்றும் கூறியுள்ளார்.

கடவுளின் செயல்கள் வித்தியாசமானவை என்றும், அவை நம் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களையும்விட மேலானவை என்பதால், அவரைத் தேடுவதையும், அவரது திருமுன் உண்மையாகவே மனம்மாறுவதையும் ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்தபோது தான் காத்திருந்த மெசியாவைப் பார்க்க முடியாது என்ற நிலையில், இயேசு பற்றிய செயல்களைப் பற்றிக் கேள்வியுற்று, அவரை அறிந்துகொள்வதற்காக, சந்தேகத்தோடு தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார், இது நமக்கு வியப்பைத் தருகிறது, ஏனெனில் யோர்தான் ஆற்றில் இயேசுவுக்கு அவர் திருமுழுக்கு அளித்தபோது இவரே கடவுளின் செம்மறி என தம் சீடர்களிடம் கூறினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமுழுக்கு யோவானின் இச்செயல், மிகுந்த நம்பிக்கையாளரே சந்தேகம் என்ற குகைப்பாதையை எதிர்கொள்கிறார் என்று அர்த்தமாகும் எனவும், இது மோசமான காரியம் அல்ல, மாறாக, ஆன்மிக வளர்ச்சிக்கு சிலநேரங்களில் இது இன்றியமையாததாக உள்ளது எனவும் கூறியத் திருத்தந்தை, கடவுள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் கற்பனை செய்வதைவிட அவர் எப்போதும் மிகப்பெரியவராக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகின்றது என்றும் கூறினார்.

திறந்த மனங்கள், கடவுளின் இரக்கத்தால் வியப்படைதல்

சிறார் தங்கள் வீட்டுக் குடில்களில் வைப்பதற்காகக் கொண்டுவந்திருந்த பாலன் இயேசு
சிறார் தங்கள் வீட்டுக் குடில்களில் வைப்பதற்காகக் கொண்டுவந்திருந்த பாலன் இயேசு

கடவுள் எவ்வாறு செயல்படுகிறார், அவரின் செயல்கள் குறித்து நாம் யூகிப்பதைவிட அவை எவ்வளவு வித்தியாசமானவை, நம் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களையும்விட அவை எவ்வாறு விஞ்சிநிற்கின்றன என்பது குறித்து வியப்படைய நாம் எப்போதும் திறந்த மனதுள்ளவர்களாய் இருப்பது அவசியம் என திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அவ்வப்போது ஆண்டவரில் எவ்வித புதியனவற்றையும் நாம் பார்க்காமல் இருக்கலாம், நாம் அவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறோம் என்ற நினைப்பில் கட்டுண்டவர்களாய் இருக்கலாம், ஆனால், கடவுள் மற்றும், மற்றவர் பற்றிய நம் கருத்தியல்கள் அல்லது சந்தேகங்கள் குறித்த சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அவரின் இரக்கத்தால் வியப்படைய நம்மை அனுமதிக்கவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இறுதியில், கிறிஸ்மஸ்க்குத் தயாரித்துவரும் நாம், நம் மத்தியில் வாழ வந்த கடவுளின் மகிமையான குழந்தை இயேசுவின் எளிமையை அறிந்துகொள்ள அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்றுரைத்து மூவேளை செப உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

அருளாளர் Isabel Cristina Mrad Campos

மேலும், டிசம்பர் 10 இச்சனிக்கிழமையன்று பிரேசில் நாட்டில் அருளாளராக அறிவிக்கப்பட்ட இருபது வயது நிரம்பிய இளம்பெண் Isabel Cristina Mrad Campos அவர்கள் குறித்து இம்மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர் 1982ஆம் ஆண்டில், ஒரு பெண்ணாக தன் மாண்பையும், கிறிஸ்தவ நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு உயிர்துறந்தார் என்று கூறினார்.

கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும், நற்செய்தியின் மகிழ்வுக்கு மனத்தாராளமாகச் சான்றுபகர, இந்த அருளாளர் இளையோருக்குத் தூண்டுதலாக இருப்பாராக என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2022, 12:30