தீமையிலிருந்து நம் அழகைக் காத்துக்கொள்ள அமல அன்னை உதவுகிறார்

மகனே, மகளே, நான் உன்னை அன்புகூர்கிறேன், நான் உன்னோடு எப்போதும் இருக்கிறேன், நீ எனக்கு முக்கியமானவர், உனது வாழ்வு விலைமதிப்பற்றது என கடவுள் கூறுவதற்குச் செவிமடுப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வரலாற்றில் பாவமின்றி பிறந்த ஒரே மனிதப் படைப்பாகவும், நம் சகோதரியும், எல்லாவற்றுக்கும் மேலாக நம் அன்னையுமாகவும் இருக்கின்ற மரியா, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களில் நம்மோடு இருக்கிறார் என்ற நல்ல செய்தியை, தூய கன்னி மரியாவின் அமலப் பிறப்பு பெருவிழா நமக்களிக்கிறது என்று இவ்வியாழனன்று  

கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்மிகப் பெற்ற மரியா

தூய கன்னி மரியாவின் அமலப் பிறப்பு பெருவிழாவான டிசம்பர் 08 இவ்வியாழன் பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு பற்றிய இப்பெருவிழா நாளின் நற்செய்தி வாசகத்தை (காண்க. லூக்.1: 26-38) மையப்படுத்தி தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவுக்குத் தோன்றி வாழ்த்தியபோது, மரியா என்று அவரது பெயரைச் சொல்லாமல், அவர் அறிந்திராத, “அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று புதிய பெயராலேயே வாழ்த்தினார் என்று கூறினார்.

எனவே மரியா பாவமின்றி பிறந்தவர் என்பதே, கடவுள் அவருக்கு அளித்த பெயர் என்றும், அதனையே இன்று நாம் கொண்டாடுகிறோம் என்றும், கடவுள் அந்தப் பெயராலேயே அவரை அழைத்து, அவர் அதற்குமுன்பு பொருட்படுத்தாமல் இருந்த மிகப்பெரிய இரகசியத்தை அவருக்கு வெளிப்படுத்தினார் என்றும் கூறியத் திருத்தந்தை, இதேபோன்றதொரு உணர்வு பாவிகளாகிய நமக்கும் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

திருமுழுக்கில் பெற்ற அருள்

மூவேளை செப உரை 081222
மூவேளை செப உரை 081222

அந்த அருளை திருமுழுக்கின்போது நாம் பெற்றுள்ளோம் எனவும், நாம் பலநேரங்களில் மறந்திருக்கின்ற அவ்வருளை நினைவில் வைத்துக் கொண்டாடுவது நல்லது எனவும், திருமுழுக்கின்போது நாம் அணிகின்ற வெண்ணிற ஆடை, தீமைகளுக்குப் பின்புலத்தில் நம்மில் மிகுந்த நன்மை உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மகனே, மகளே, நான் உன்னை அன்புகூர்கிறேன், நான் உன்னோடு எப்போதும் இருக்கிறேன், நீ எனக்கு முக்கியமானவர், உனது வாழ்வு விலைமதிப்பற்றது என கடவுள் கூறுவதற்குச் செவிமடுப்போம் என்று கூறியத் திருத்தந்தை, நம் வாழ்வில் சோர்வாய் இருக்கும்போது கடவுளின் இக்குரலை நினைவுகூர்வோம் என்று கேட்டுக்கொண்டார்.  

போராட்டங்களுக்கு மத்தியில் நம் ஆன்ம அழகை காத்துக்கொள்ளவேண்டும் மற்றும், நல்லவற்றையும், நம்மிலுள்ள நல்லனவற்றையும் தெரிவுசெய்ய முயற்சிக்கவேண்டும் என்ற முக்கியமான பாடத்தை, இந்நாளின் இறைவார்த்தை நமக்குக் கற்றுத் தருகிறது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.  

மரியா நம்மோடு

மூவேளை செப உரை 081222
மூவேளை செப உரை 081222

நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கப் போராடும் நாம், மரியாவிடம் நம்மையே நாம் ஒப்படைத்து, அன்னையே, என்னை உம் கரங்களில் பற்றிக்கொள்ளும், உம்மோடு இருக்கையில் தீமைக்கு எதிரான போராட்டத்தில் நான் அதிக வலிமை பெறுவேன், மற்றும், எனது உண்மையான அழகைக் கண்டுகொள்வேன் என்று அவ்வன்னையிடம் நாம் கூறலாம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

தீமையிலிருந்து நம் அழகைக் காத்துக்கொள்ள அமல அன்னை உதவுவாராக என்றுரைத்து, தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2022, 13:00