திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான்
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என, டிசம்பர் 30 இவ்வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த புரூனி அவர்கள், இவ்வியாழன் மாலையில் அத்திருத்தந்தை நன்கு ஓய்வெடுத்தார் என்றும், இவ்வெள்ளி பிற்பகலில் அவரது அறையில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் பங்கெடுத்தார் என்றும் கூறினார்.
மேலும், டிசம்பர் 30, இவ்வெள்ளி உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகவும், அவரது உடல்நலனுக்காகவும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு இறைவேண்டல் செய்யப்பட்டது. இத்திருப்பலியை உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் ஆஞ்சலோ தெ தொனாத்திஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றினார்.
மேலும், உரோம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களோடு சேர்ந்து பயணித்த பாதையை நினைவுகூர்ந்து அவருக்காகச் செபிக்குமாறு, உரோம் நகரில் வாழ்கின்ற பங்குத்தள குழுமங்கள், சிற்றாலயங்களின் பொறுப்பாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் மற்றும், நன்மனம்கொண்ட எல்லாருக்கும் உரோம் மறைமாவட்டம் அழைப்புவிடுத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்