இத்தாலிய பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட்டமைப்பு இத்தாலிய பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட்டமைப்பு  

திருத்தந்தை: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படுவது தோழமையுணர்வு

பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட்டமைப்பு, சமுதாயத்தில் எல்லாரையும் ஒன்றிணைக்கும் செயல்பாட்டை ஊக்குவிக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உடலளவில் மாற்றுத்திறன் கொண்டிருப்போருக்கு அனுதாபம் அல்ல, மாறாக தோழமையுணர்வே தேவைப்படுகிறது என்று, இத்தாலிய பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட்டமைப்பினரை (UICI)  இத்திங்களன்று சந்தித்தபோது கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 12, இத்திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பார்வையற்றோர் மற்றும் அவர்களுக்கு உதவுவோர் என 300 பேரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் எல்லாரையும் ஒன்றிணைக்கும் செயல்பாட்டை இந்த கூட்டமைப்பினர் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய சமுதாயம் கடினமான காலக்கட்டத்தை எதிர்கொள்ளும் இவ்வேளையில், இக்கூட்டமைப்பின் பாதுகாவலரான புனித லூசியா போன்று, நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகத் திகழுமாறு கூறியத் திருத்தந்தை, தங்களுக்காக அழாமல், காரியங்களை மேம்படுத்த பணியாற்றுவோரிடமிருந்து பிறக்கும் நம்பிக்கை இத்தாலிய சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இத்தாலிய பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட்டமைப்பு
இத்தாலிய பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட்டமைப்பு

இக்கூட்டமைப்பினர், டிசம்பர் 13, இச்செவ்வாயன்று சிராக்கூசின் புனித லூசியா திருநாளைக் கொண்டாடத் தயாரித்துவரும்வேளை, பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறை உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வோடு உதவுவோருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1920ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட UICI என்ற அரசு-சாரா மற்றும் மதம் சாரா இக்கூட்டமைப்பு, உலக பார்வைற்றோர் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளது. பார்வையிழந்தோர் மற்றும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், சமுதாயத்தில் முழுவதுமாக ஒன்றிணைக்கப்படும்வண்ணம் அவர்களுக்கு எதிரான சமூக முற்சார்பெண்ணங்ளை அகற்றவும், அவர்களுக்கு சிறந்ததோர் உலகையும் பாதுகாப்பான சூழலையும் அமைத்துக்கொடுக்கவும் இக்கூட்டமைப்பு பணியாற்றி வருகிறது.

புனித லூசியாவின் துணிச்சல்

UICI அரசு-சாரா மற்றும் மதம் சாரா கூட்டமைப்பு
UICI அரசு-சாரா மற்றும் மதம் சாரா கூட்டமைப்பு

மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் தியோக்கிளேசியன் கிறிஸ்தவருக்கு எதிராக நடத்திய சித்ரவதைகளில் தனது கிறிஸ்தவ நம்பிக்கைக்காக மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்டவர் புனித லூசியா. இவர் திருமணத்திற்கு இணங்காததால் இவரது கண்கள் பிடுங்கப்பட்டன. மனசாட்சியைப் பின்பற்றி, உண்மைக்குச் சான்றுபகர்ந்த இப்புனிதரின் துணிச்சலான வாழ்வை முன்மாதிரிகையாய்க் கொள்ளுமாறு இக்கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை.  

மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தில் மதிக்கப்படவேண்டிய வளங்கள் என்றும், அவர்கள் வாழ்வில் மற்றவர் முன்னேறிச் செல்ல உதவவேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, சமுதாயத்திற்கு நம்பிக்கையை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2022, 14:16