புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் (2022) புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் (2022) 

திருத்தந்தை, கர்தினால்கள் அவையினர் சந்திப்பு

கர்தினால்கள் அவையின் கூட்டத்தில் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்வாண்டு அக்டோபரில் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு உதவும் கர்தினால்கள் அவையும் டிசம்பர் 5, இத்திங்கள், 6 இச்செவ்வாய் ஆகிய இரு நாள்களில் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் நடத்திய கூட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, திருப்பீட செய்தித் தொடர்பகம்.

திருஅவையின் ஒன்றிணைந்து பயணம் என்பது குறித்து, 2023 மற்றும், 2024ஆம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள், திருஅவையில் சிறார் பாதுகாப்பு, எகிப்தின் Sharm-el-Sheikhல் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்து 27வது உச்சி மாநாடு (COP-27) போன்ற முக்கியமான தலைப்புகள் கர்தினால்கள் அவையில் விவாதிக்கப்பட்டன என்று அத்திருப்பீடத் தொடர்பகம் அறிவித்துள்ளது.  

இக்கூட்டத்தில் கர்தினால்கள் Pietro Parolin, Giuseppe Bertello, Óscar A. Rodríguez Maradiaga, S.D.B., Reinhard Marx, Seán Patrick O'Malley, O.F.M. Cap., Oswald Gracias, Fridolin Ambongo Besungu, O.F.M. Cap. ஆகியோரும், இவ்வவையின் செயலர் பேராயர் Marco Mellino அவர்களும் பங்குபெற்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் இவ்விரண்டு நாள்களும் கலந்துகொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5ம் தேதி திங்களன்று இக்கர்தினால்கள் அனைவரும், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், இவ்வாண்டு நவம்பர் 27ம் தேதி இறைபதம் சேர்ந்த கர்தினால்  Richard Kuuia Baawobr அவர்களின் நினைவாகத் திருப்பலி நிறைவேற்றினர்.

இக்கூட்டத்தில் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்வாண்டு அக்டோபரில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு குறித்தும், பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean O'Malley அவர்கள், சிறார் பாதுகாப்பு குறித்தும் அறிக்கைகள் சமர்ப்பித்தனர்.  

அடுத்த இக்கர்தினால்கள் அவையின் கூட்டம், 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2022, 16:19