இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசை ஐந்திற்குப் பேட்டி இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசை ஐந்திற்குப் பேட்டி 

திருத்தந்தை: இது கவலைநிறைந்த, போரின் கிறிஸ்மஸ்

இக்கிறிஸ்மஸில் எத்தனையோ மக்களும், புலம்பெயர்ந்தோரும் துன்புறும்வேளை உலகில் நிலவும் புறக்கணிப்பு மனநிலை மிகுந்த கவலையளிக்கின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உலகின் பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாக நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களை மூன்றாம் உலகப் போர் எனக் குறிப்பிட்டு, அதனை நிறுத்துவதற்கு மிக அதிகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

டிசம்பர் 18, இஞ்ஞாயிறன்று இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசை ஐந்தில், "நான் விரும்பும் கிறிஸ்மஸ்" என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், அத்தொலைக்காட்சியின் வத்திக்கான் செய்தியாளர் Fabio Marchese Ragona அவர்களோடு உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் உலகில் பரவிவரும் போர் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கிவரும் இந்நாள்களில் பாலன் இயேசுவை நோக்குமாறு ஊக்கப்படுத்தினார்.

துண்டு துண்டாக இடம்பெறும் ஒரு போர்

ஏழைகள், போர், உலகக்கோப்பை கால்பந்து போட்டி என பல்வேறு தலைப்புக்களில் தன் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை, உலகின் பல்வேறு பகுதிகளில் போர் இடம்பெறும் ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்துவருகிறோம், உக்ரைன் நமக்கு அருகில் உள்ளது என்றும், 13 ஆண்டுகளாக சிரியாவிலும், மியான்மார், மற்றும், ஆப்ரிக்காவில் எல்லாப் பகுதிகளிலும் போர் இடம்பெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.

உலகம் போர்ச்சூழலில் உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இக்கிறிஸ்மஸில் எத்தனையோ மக்களும், புலம்பெயர்ந்தோரும் துன்புறும்வேளை உலகில் நிலவும் புறக்கணிப்பு மனநிலை மிகுந்த கவலையளிக்கின்றது எனவும், தெருவில் உதவிக்காக அழுகின்ற ஒரு பெண்ணைப் புறக்கணித்துவிட்டு, ஆடம்பரமாக உடை உடுத்தி உணவகத்துக்குள் நுழையும் ஒரு பெண்ணை கற்பனை செய்து பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கவலையான கிறிஸ்மஸ்

இக்கிறிஸ்மஸ் கவலையான கிறிஸ்மஸ் மற்றும், போரின் கிறிஸ்மஸ் என்றும், மக்கள் பசியால் வாடுகின்றனர் என்றும், இரஷ்ய ஏவுகணைகளின் துண்டுகளால் சிறார் விளையாடுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சுற்றி இடம்பெற்றுவரும் ஊழல் குறித்தும் பேசிய திருத்தந்தை, நாம் எல்லாரும் பாவிகள் மற்றும் நாம் அனைவரும் மன்னிப்புக் கேட்கவேண்டும், நாம் பாவிகளாக இருந்தாலும், கறைபட்டவர்கள் அல்ல என்றும் கூரியுள்ளார்.

வெற்றியில் தாழ்ச்சி

இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசை ஐந்திற்குப் பேட்டி
இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசை ஐந்திற்குப் பேட்டி

கத்தாரில் நடைபெற்ற FIFA கால்பந்து போட்டியில் அர்ஜென்டீனா உலகக்கோப்பையை வெல்லும் என அறிவதற்கு முன்னரே இப்பேட்டியில் பேசிய திருத்தந்தை, வெற்றியாளர்கள் தாழ்ச்சியோடு வாழவேண்டும், வெற்றிபெறாதவர்களும் மகிழ்வோடு வாழவேண்டும், ஏனென்றால் மிகப்பெரிய விழுமியம் வெற்றி அல்லது தோல்வி அல்ல மாறாக, நேர்மையோடும் நன்றாகவும் விளையாடுவாகும் என்று எடுத்துரைத்தார்.

எப்போதுமே அதிகம் ஆற்றலாம்

பத்தாண்டு பாப்பிறைப் பாணியில் இன்னும் செய்யவேண்டியவை உள்ளன எனவும், திருப்பீடத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ள சீர்திருத்தத்தை தன் பணிக்காலத்தில் முக்கியமானது எனக் கூறலாம் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, மறைப்பணி ஆர்வம் மற்றும், செபம் இல்லையெனில் எதையுமே முன்னோக்கி நகர்த்த முடியாது, குழந்தை இயேசு நம்பிக்கையைக் கொணர்கிறார், அவரை நோக்குவோம் என்று தன் பேட்டியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2022, 15:07