அமைதி, தனி மனிதரில், குடும்பத்தில், நகரிலிருந்து பிறக்கின்றது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
அமைதி, ஒவ்வொரு மனிதரில், ஒவ்வொரு குடும்பத்தில், மற்றும், ஒவ்வொரு நகரிலிருந்து பிறக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பெயின் நாட்டில் அமைதிக்காகப் பணியாற்றும் அரசு-சாரா அமைப்பு ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
“Mensajeros de la Paz“ என்ற அரசு-சாரா அமைப்பை உருவாக்கியவரும், அதன் தலைவருமான அருள்பணி Ángel Garcia Rodriguez அவர்களை, இம்மாதத்தில் திருப்பீடத்தில் சந்தித்தபோது பதிவுசெய்த காணொளிச் செய்தியில், மனித மற்றும், சமூக முன்னேற்றத்திற்கு அவ்வமைப்பினர் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் போர்கள் முடிவுக்குவர உதவுமாறு அவ்வமைப்பின் பணியாளர்கள் மற்றும், தன்னார்வலர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதனால் உலகில் அமைதி நிலவ உதவ இயலும் என்றுகூறி, அவர்கள் அமைதிக்கு ஆற்றிவரும் பணிகளைத் தொடருமாறும் ஊக்கப்படுத்தினார்.
இக்காலக்கட்டத்தில் அமைதியின் கைவினைஞர்கள் அதிகம் தேவைப்படுவதால், நன்மனம்கொண்ட எல்லாரும், அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருக்குமாறு தான் சந்திக்கும் எல்லாரிடமும் விண்ணப்பித்து வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Mensajeros de la Paz அமைப்பினர், நற்செய்தியை சொல்லால் மட்டுமல்லாமல் தாங்கள் ஆற்றும் அனைத்திலும் வெளிப்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.
அன்புச் சூழலை உருவாக்குவது, பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்றவற்றை பணிகளோடு இணைத்து ஆற்றும் முறையை இவ்வமைப்பினர் தெரிந்துவைத்துள்ளதைப் பாராட்டியதோடு அதில் தொடர்ந்து வளருமாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை, அவ்வமைப்பினர், அமைதியின் கைவினைஞர்களாக இருப்பதற்கு நன்றியும் தெரிவித்தார்.
அமைதியின் தூதர்கள்
Mensajeros de la Paz என்ற அரசு-சாரா அமைப்பு, 1962ஆம் ஆண்டில் இஸ்பெயினில் அருள்பணி Ángel García Rodríguez மற்றும், Ángel Silva Sánchez ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது. தேசிய மற்றும், பன்னாட்டு அளவில் அமைதிக்காகப் பணியாற்றும் இவ்வமைப்பு Asturias இளவரசர் நல்லிணக்க விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது.
இவ்வமைப்பு எழுபது நாடுகளில், சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்வோர், மற்றும், நலிவுற்ற மக்களின் மனித மற்றும், சமூக வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்