அன்னை தெரேசா சபையினர் திருத்தந்தைக்கு வாழ்த்து அன்னை தெரேசா சபையினர் திருத்தந்தைக்கு வாழ்த்து 

திருத்தந்தை: மற்ற மதத்தினருக்கு உதவுவது கிறிஸ்தவப் பண்பாகும்

புனித அன்னை தெரேசா தன் இதயத்தின் இருளில் உண்மையான ஆன்மிகப் புயலை எதிர்கொண்டபோது தொடர்ந்து செபித்து அதனைக் கடந்துசென்றவர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

தனது 86வது பிறந்த நாளாகிய டிசம்பர் 17, இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் "அன்னை தெரேசா விருது"க் குழுவின் ஐம்பது பிரதிநிதிகளைச் சந்தித்து பிறரன்பின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித அன்னை தெரேசா, துணிச்சல்மிக்க பெண் என்றும், அவர் தன் இதயத்தின் இருளில் உண்மையான ஆன்மிகப் புயலை எதிர்கொண்டபோது தொடர்ந்து செபித்து அதனைக் கடந்துசென்றவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சந்திப்பில் கூறினார்.

பிறரன்பு தன்னிலே நல்லது, ஆயினும் நாம் மற்ற மதத்தினருக்குப் பிரறன்புப் பணியாற்றுகையில் கிறிஸ்தவத்தின் உடனிருப்பை வெளிப்படுத்துகிறோம் எனவும், ஏழ்மை, உடனிருப்பு, மனிதஉடன்பிறந்த உணர்வு, இறைவேண்டல் ஆகியவற்றின் செய்தியை, புனித அன்னை தெரேசா மரபுரிமையாக நமக்கு எப்போதும் கொடுக்கிறார் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

எளிமை மற்றும் செபத்தோடு ஏழ்மையை வாழ்ந்துகாட்ட புனித அன்னை தெரேசா விண்ணிலிருந்து நமக்கு உதவுகிறார் என்றும், அதனால் நாமும் பிறருக்கு உதவமுடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், தனது 86வது பிறந்த நாளான இச்சனிக்கிழமையன்று, உரோம் அன்னை தெரேசா சபையினரின் இல்லத்தில், இருபது அருள்சகோதரிகள் மற்றும், அவர்கள் பராமரிக்கும் இருபது ஏழைகள் மத்தியில், ஏழைகளுக்கென தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள பிறரன்புப் பணியாளர்கள் மூன்று பேரைக் கவுரவப்படுத்தி விருது வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர் செய்தி

மேலும், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருவருகைக் காலத்தை மையப்படுத்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கிறிஸ்மஸ்க்குத் தயாரித்துவரும் இந்நாள்களில், அன்னை மரியா நம்மைத் தன் கரங்களில் தாங்கி வழிநடத்துவாராக. மேலும், அவரது குழந்தையின் எளிமையில் வரவிருக்கின்ற கடவுளின் மகிமையை நாம் ஏற்க உதவுவாராக என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2022, 15:42