செபமாலை அன்னை மரியா செபமாலை அன்னை மரியா 

திருத்தந்தை: அமைதியின் மறைப்பணியாளர்களாகச் செயல்படுங்கள்

செபமாலை அன்னை மரியாவோடு சேர்ந்து அமைதியின் மறைப்பணியாளர்களாகச் செயல்படுவோம் என்ற விருதுவாக்கோடு, அர்ஜென்டினாவின் ரொசாரியோ உயர்மறைமாவட்டத்தில் சிறப்பு மரியா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

அமைதியின் மறைப்பணியாளர்களாகப் பணியாற்றுங்கள் என்று, அர்ஜென்டீனா நாட்டின் ரொசாரியோ உயர்மறைமாவட்ட கத்தோலிக்கருக்கு, டிசம்பர் 9, இவ்வெள்ளி காலையில்  அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபமாலை அன்னை மரியா திருவுருவம் இஸ்பெயின் நாட்டின் Cadiz நகரிலிருந்து ரொசாரியோ உயர்மறைமாவட்டத்திற்கு வந்தடைந்ததன் 250ஆம் ஆண்டைக் குறிக்கும் விதமாக, சிறப்பு மரியா ஆண்டைக் கொண்டாடும் அவ்வுயர்மறைமாவட்ட கத்தோலிக்கரிடம் காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயங்களில், குடும்பங்களில் மற்றும், சமுதாயம் அனைத்திலும், நம் அமைதியாகிய கிறிஸ்துவைக் கொண்டுவருவதற்கு அன்னை மரியாவோடு சேர்ந்து அமைதியின் கருவிகளாகச் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.

செபமாலை அன்னை மரியா

இஸ்பெயினிலிருந்து அர்ஜென்டீனாவுக்கு கொண்டுவரப்பட்ட அச்செபமாலை அன்னையின் பெயராலேயே அழைக்கப்படும் ரொசாரியோ அதாவது செபமாலை என்ற பெயராலேயே அவ்வுயர்மறைமாவட்டத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகர் அழைக்கப்படுகிறது.  

செபமாலை அன்னை மரியா பக்தி 13ம் நூற்றாண்டிலிருந்து இருந்து வருகிறது. ஆயினும், 1571ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி Lepanto எனுமிடத்தில், சிலுவைப்போர் வீரர்கள், ஒட்டமான்களோடு போரிட்டு வெற்றிபெற்றதற்குப்பின் திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், இவ்வன்னை பக்தியை உலகளாவியத் திருஅவையில் உருவாக்கினார். அன்றிலிருந்து செபமாலை அன்னை திருநாள் அக்டோபர் 7ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மரியாவோடு அமைதியின் மறைப்பணியாளர்கள்

ரொசாரியோ உயர்மறைமாவட்டம், இவ்வாண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கியுள்ள ஓராண்டு கொண்டாட்டம், நம் கிறிஸ்தவ வேர்களை வலுப்படுத்தவும், நிகழ்காலத்தில் வன்முறையற்ற வழியில் வாழவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவும் நன்றியோடு நினைவுகூரும் நிகழ்வாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அமைதியின் மறைப்பணியாளர்களாக செபமாலை அன்னை மரியாவோடு சேர்ந்திருப்போம் என்ற இந்த சிறப்பு மரியா ஆண்டின் விருதுவாக்கு, ஒருவர் தன்னோடும், குடும்பம், அயலவர், மற்றும், சமுதாயத்தோடும் அமைதியில் வாழவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.  

அந்நகர்ப் பகுதியில் இடம்பெறும் வன்முறை மற்றும், பாதுகாப்பற்றநிலை, போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடையன என்றும், ரொசாரியோ நகரில் மட்டும் 2022ஆம் ஆண்டில் 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையினோர் சிறார் மற்றும் முதியோர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

அவ்வுயர்மறைமாவட்ட குடும்பங்களை, குறிப்பாக, வறுமை, கைவிடப்படல், வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் போன்றவற்றால் துன்புறும் அனைவரையும் செபமாலை அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்துச் செபிப்பதாகத் தெரிவித்து தன் காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2022, 14:18