திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணியாளர்களுக்கு உரை நிகழ்த்தும் திருத்தந்தை திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணியாளர்களுக்கு உரை நிகழ்த்தும் திருத்தந்தை  

பிரச்சனைகள் மத்தியிலும் அமைதியை சுவைப்போம் : திருத்தந்தை

நாம் அமைதியின் சாட்சிகளாகவும் கைவினைஞர்களாகவும் விளங்கிட வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அனைத்திற்கும் மேலாக, நீங்கள் அமைதியை பெறவேண்டுமென நான் விரும்புகிறேன் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் அமைதி கிடைக்கட்டும் என்றும் திருப்பீடத்தில் சந்தித்த பணியாளர்களிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 22, இவ்வியாழனன்று, திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணியாளர்களைத் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து அவர்களுக்கு வழங்கியுள்ள கிறிஸ்து பிறப்பு செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு காரியங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக, அமைதி என்பது எல்லாம் நன்றாக இருக்கிறது, எந்தப் பிரச்சனையும் சிரமங்களும் இல்லை என்பதல்ல, மாறாக, பல்வேறு துன்ப துயரங்கள் மத்தியிலும் இறைவேண்டலிலும், ஒருவருக்கொருவர்மீதான இணைந்த அன்பிலும் பெறுவதுதான் உண்மையான அமைதி என்பதை குழந்தை இயேசு, யோசேப்பு மற்றும் மரியாவின் திருக்குடும்பம் நமக்குக் காட்டுகிறது என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குறிப்பாக, உங்கள் குழந்தைகள், மற்றும் சிறார் அமைதியைப் பெறவேண்டுமென நான் விரும்புகின்றேன் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையக் குழந்தைகள் இறுக்கமான மனநிலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நிறைய பதற்றங்களைக் தங்கள் உள்ளங்களில் குவித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒருவர் தனக்கு எதுவும் இல்லை என்பதுபோல காட்டிக்கொள்ளக் கூடாது, அதனை வெளிப்படுத்தவேண்டும், அதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நெருக்கடிகளிலிருந்து மந்திர சக்தி கொண்டு வெளிய வரமுடியாது என்றும்  ஒருவர் தன்னைத்தானே, அமைதியாகவும், பொறுமையாகவும் புரிந்து கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகும் என்றும் விவரித்துள்ளார்.

இரண்டாவதாக, நாம் அமைதியின் சாட்சிகளாகவும் கைவினைஞர்களாகவும் விளங்கிடவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக வரலாற்றில் இத்தருணத்தில், அமைதியைக் கட்டியெழுப்பவதில் நம்  ஒவ்வொருவருக்கும் உள்ள பங்களிப்பையும் பொறுப்புணர்வையும் இன்னும் வலுவாக உணர்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2022, 14:54