திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் இளகிய மனமும் அன்பு நிறைந்த இரக்கமும் உண்மையான தூய உணர்வைத் தூண்டி எழுப்பியுள்ளன என்று கூறியுள்ளார் Toronto-வின் கர்தினால் Thomas Collins.
வத்திக்கான் வானொலிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் Collins அவர்கள், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வியக்கத்தக்க மனிதர், ஒரு ஆயரின் உண்மையான மாதிரி மற்றும் ஒரு எடுத்துக்காட்டான திருத்தந்தை என்று விவரித்துள்ளார்.
"ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தான் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்குமுன் கூறிய இறுதி வார்த்தைகள், அவரது ஒட்டுமொத்த வாழ்வின் மையமாக அமைகின்றன என்றும், இது கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவின் சிறந்த உணர்வை அவரில் நாம் காண்கிறோம் என்றும், இந்தப் புனித உறவை உலகிற்கு அறிவிக்கும்பொருட்டு அவர் தனது அறிவையும் இதயத்தையும், தன்னை முழுவதையுமே பயன்படுத்திக்கொண்டார் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Collins.
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஒரு கல்வியியல் இறையியலாளர் மட்டுமல்ல வியக்கத்தக்க அறிவுத்திறனும், மகத்தான கற்றல் ஆற்றலும், இவை அனைத்திற்கும் மேலாக ஆழ்ந்த இறைபக்தியும் கொண்டவர் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் கர்தினால் Collins.
ஒட்டுமொத்த உலக மக்களும் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களுக்குப் பிரியாவிடை கொடுக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நான் சொல்ல விரும்புவதெல்லாம், நம்பிக்கை கொண்ட நல்ல பணியாளரே, நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்பதே என்று கூறியுள்ள கர்தினால் Collins அவர்கள், இறைவனின் திராட்சை தோட்டத்தில் இறுதிவரை அவர் நம்பிக்கைகுரிய பணியாளராக இருந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்