தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்  

மற்றவர்களின் காயங்களைத் தொட்டுக் குணப்படுத்த நாம் தயாரா

சமுதாயத்தால் இன்றும் ஒதுக்கிவைக்கப்படும் தொழுநோயாளிகள் மத்தியில் நல்ல சமாரியராகப் பணியாற்றும் அமைப்புக்களுக்கு நன்றி - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வாண்டு சனவரி மாதம் 29ஆம் தேதி சிறப்பிக்கப்படும் தொழுநோயாளர் தினத்தை முன்னிட்டு உரோம் நகர் கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வோருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹான்சனின் நோய் என்றும் அழைக்கப்படும் தொழுநோய், விவிலியத்திலேயே காணப்படும் மிகப்பழமையான் நோய் என்பதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தால் இன்றும் ஒதுக்கிவைக்கப்படும் இந்நோயாளிகள் மத்தியில் நல்ல சமாரியராக பணியாற்றும் அமைப்புக்களுக்கு நன்றியை தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

நாம் பலவழிகளில் முன்னேற்றம் கண்டுவருகின்றபோதிலும், தொழுநோயாளருடன் உடன்செல்வது, பலவீனமான மக்களுக்கு அக்கறைகாட்டி ஆதரவளிப்பது என்பனவற்றில் போதிய அறிவின்றியே இருக்கின்றோம், பாராமுகமாகவே செயல்படுகின்றோம் என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களின் காயங்களைத் தொட்டுக் குணப்படுத்த நாம் தயாராக இருக்கின்றோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டும் என்பதையும் தன் செய்தியில் முன்வைத்துள்ளார்.

ஒவ்வொர் ஆண்டும் சனவரி மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தொழுநோய் குறித்த இந்த விழிப்புணர்வு நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இரண்டாம் கருத்தரங்கு, ’எவரையும் கவனிப்பாரின்றி விட்டுவிடாதீர்கள்’ என்ற தலைப்புடன் உரோம் நகரின் அகுஸ்தீனியானும் நிறுவனத்தில் இடம்பெற்றுவருகிறது.

ஹான்சன் நோயாளிகள் மாண்புடன் நடத்தப்படவேண்டியது குறித்து 2016ஆம் ஆண்டு, முதல் கருத்தரங்கை ஏற்பாடுச் செய்த வத்திக்கான், தற்போது, கடந்த ஆழு ஆண்டுகளின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றம் குறித்து திங்கள் மற்றும் செவ்வாய் என இரு தின கருத்தரங்கில் ஆராய்ந்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2023, 13:42