திருத்தந்தையின் மூவேளை செப உரை
மெரினா ராஜ் – வத்திக்கான்
பொன், தூபம், வெள்ளைப்போளம் என்னும் பரிசுப் பொருள்களுடன் இயேசுவைக் காணவந்த ஞானியர் அழைப்பு, தெளிந்துதேர்தல் மற்றும் வியப்பு என்னும் மூன்று விலைமதிப்பற்ற பரிசுகளை நமக்களிக்கின்றனர் என்று மூவேளை செப உரையின்போது கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 06, இவ்வெள்ளியன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் தான் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அழைப்பு
வானதூதர்களால் அறிவிக்கப்படாமல் தாங்களாகவே வானியல் விண்மீன்கள் பற்றிப் படித்து இறைவன் பிறப்பை அறிந்து, அறிமுகமில்லாத இடத்திற்குப் பயணம் செய்தவர்கள் ஞானியர் என்றும், அறிந்ததை விட அறியாதவற்றால் அதிகமாக ஈர்க்கப்பட்டு பயணம் மேற்கொண்ட அவர்களைப் போல எதார்த்தமான வாழ்வில் இறைவனைக் காண நாம் அழைக்கப்படுகின்றோம் என்றுக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
தேர்ந்து தெளிதல்
ஏரோது மன்னனின் தீய எண்ணம் அறிந்து தங்களதுப் பயணத்தின் திசையை மாற்றிய ஞானியர் போன்று, நமது வாழ்வில் நாம் சென்ற தீய பாதைகளை விட்டு நமது இலக்கை நோக்கிய வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவுடன் செயல்பட வேண்டும் எனவும் இதற்கான அருளை செபத்தில் இடையறாது கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வியப்பு
நீண்ட தூரப் பயணம் மேற்கொண்ட ஞானியர் ஏழ்மை நிலையில் பிறந்த பாலன் இயேசுவில் இறைவனைக் கண்டு, வியப்பில் ஆழ்ந்து, மகிழ்ந்து, மண்டியிட்டு வணங்கினர் எனவும், அத்தகைய ஞானியரைப் போல நாமும் பணிவு, பொறுமை, மௌனம், ஏழ்மை, எளிமை போன்றவற்றில் கடவுளைக் கண்டு வியப்படைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்