திருத்தந்தையின் வருகைக்காக தயாராகும் Kinshasa திருத்தந்தையின் வருகைக்காக தயாராகும் Kinshasa 

திருத்தந்தையின் காங்கோ மற்றும் தென்சூடான் பயணம் ஒரு முன்தூது

சனவரி 31ஆம் தேதி உரோம் உள்ளூர் நேரம் காலை 7.55 அதாவது இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.25 க்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் பிற்பகல் 3.00 மணி அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு காங்கோ சன நாயகக் குடியரசின் கின்சாசாவில் உள்ள NDJILI பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

‘அனைவரும் ஒன்றாயிருக்க நான் செபிக்கின்றேன்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டுள்ள திருத்தந்தையின் காங்கோ மற்றும் தென்சூடான் நாடுகளுக்கான திருத்தூதுப் பயணமானது வருகின்ற சனவரி 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி முதல்  பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை, தென்சூடானின் ஜூபாவிற்கும் அமைதிக்கான திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கின்றார். திருத்தந்தை ஒருவர் காங்கோ குடியரசு மற்றும் தென் சூடானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். தனது இந்த அமைதியின் திருத்தூதுப்பயணம் நல்ல முறையில் நடைபெற உரோம் மாநகர் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் Salus Populi Romani, அதாவது உரோம் மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியா திருப்படத்தின் முன்பாக, தான் மேற்கொள்ளவிருக்கும் 40வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்துச் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெளிநாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பு அப்பயணங்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதையும், அப்பயணங்களை முடித்துத் திரும்பும்போது அப்பெருங்கோவிலுக்குச் சென்று அவ்வன்னையிடம் நன்றி கூறுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 31 செவ்வாயன்று தொடங்கவிருக்கும் காங்கோ தென்சூடான் திருத்தூதுப் பயணத்திற்காகவும் செபித்தார்.சனவரி 31ஆம் தேதி உரோம் உள்ளூர் நேரம் காலை 7.55 அதாவது இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.25 க்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் பிற்பகல் 3.00 மணி அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு காங்கோ சன நாயகக் குடியரசின் தலைநகர் கின்சாசாவில் உள்ள NDJILI பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார். “Palais de la Nation என்னுமிடத்தில் குடியரசின் அரசுத்தலைவர்கள், திருஅவைத்தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்பர். அதனைத்தொடர்ந்து உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12.00 மணிக்கு “Palais de la Nationல் அரசுத்தலைவரை சந்தித்த பின்னர் அரசு அதிகாரிகள், சமூகத்தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்ற இருக்கின்றார்.

வழிபாட்டில் காங்கோ மக்கள்
வழிபாட்டில் காங்கோ மக்கள்

பிப்ரவரி 1ஆம் தேதி உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு “Ndolo” விமான நிலையத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை மாலையில் நாட்டின்  கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை Apostolic Nunciature என்னுமிடத்தில் சந்தித்து உரையாற்றுகின்றார். அதன் பின் மாலை 6.30 மணிக்கு நாட்டின்  தொண்டுப் பணிகளில் ஈடுபடுவோரையும் சந்தித்து உரையாற்ற உள்ளார். பிப்ரவரி 2ஆம் தேதி இளையோர் மற்றும் மறைக்கல்வியாளார்களை  மறைசாட்சிகள் மைதானத்தில் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  காங்கோவின் “Notre Dame du பேராலயத்தில், அருள்பணியாளர்கள்,  இருபால்துறவிகள்,  அருள்பணித்துவ மாணவர்களுடனான செபவழிபாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

பிப்ரவரி 3ஆம் தேதி காலை CENCO பகுதி ஆயர்களை சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கின்சாசா “Ndjili” பன்னாட்டு விமான நிலையத்தில் அரசுத்தலைவர், தலத்திரு அவைதலைவர்கள் ஆகியோரிடம் பிரியாவிடை பெற்று அங்கிருந்து தென் சூடானின் ஜூபாவிற்கு பயணிக்க உள்ளார். அப்பயணத்தில் Canterbury  ஆங்கிலிக்கன் பேராயர் மற்றும் Scotland  கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்  உடன் பயணிக்க இருக்கின்றனர். தென் சூடானின் அரசுத்தலைவர்கள் மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களின் வரவேற்பையும் பெற்ற பின்னர் பிப்ரவரி 4ஆம் தேதி, குடிபெயர்ந்த மக்களுடனான சந்திப்பை மேற்கொள்கின்றார். 2022-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, திருத்தந்தையின் உடல்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இத்திருத்தூதுப் பயணத்தின்போது, அந்நாடுகளிலுள்ள அரசுத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள், அருள்பணியாளர்கள்,  அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், இருபால் துறவிகள் அனைவரையும் திருத்தந்தை சந்திக்கின்றார் அதன் பின் கிறிஸ்தவ  ஒன்றிப்பின் செபவழிபாட்டில் கலந்து கொண்டு தனது அமைதிக்கான திருப்பயணத்தை நிறைவு செய்கின்றார்.

காங்கோ நாட்டில் திருத்தந்தைக்கு  வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகள்
காங்கோ நாட்டில் திருத்தந்தைக்கு வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகள்

காங்கோ வரலாறு

காங்கோ மக்களாட்சி குடியரசின் தலைநகரமான கின்ஷாசா நாட்டின் முதலாம் பெரிய நகரமாகும். காங்கோ நதியின் தென்கரையில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள் தொகை  2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 70,17,000 ஆகும். தற்போது நகர்ப்புற பகுதியாக உள்ள கின்ஷாசா 11 கோடிக்கும் அதிகமான மக்கட்தொகை கொண்ட நகரமாக, காங்கோ மக்களாட்சி குடியரசின் 26 மாநிலங்களுள் முக்கியமான மாநிலமாக உள்ளது. கெய்ரோ மற்றும் லாகோஸ் ஆகிய இடங்களுக்கு பின் ஆப்ரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான கின்ஷாசா உலகின் மிகப்பெரிய பிரெஞ்சு மொழிப்பேசும் நகர்ப்புற பகுதியாகும். பள்ளிகள்,  செய்தித்தாள்கள்,  பொது சேவைகள், மற்றும் உயர்வர்த்தகம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பிரெஞ்சு மொழி, அரசு அலுவலக மொழியாக உள்ளது. கின்ஷாசாவில் வசிப்பவர்கள் கீய்னோய்ஸ் (Kinois) அல்லது கின்ஷாசாசன்ஸ் (Kinshasans) என அழைக்கப்படுகின்றனர். இவர்களில் பழங்குடியின மக்களாகிய ஹும்,தெக்கே ஆகியவர்களும் அடங்குவர்.

1881 ஆம் ஆண்டில் ஹென்றி மோர்டன் ஸ்டான்லி என்பவரால் நிறுவப்பட்ட இந்த வர்த்தக நகரம் பெல்ஜியத்தின் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டை கௌரவப்படுத்தும் விதமாக லியோபோல்ட்வில்லே எனப் பெயரிடப்பட்டது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பரந்த பிரதேசத்தை, ஒரு காலனியாக அல்லாமல் தனியார் சொத்தாக இவர்கள் நிர்வகித்து வந்தனர். 1923 ஆம் ஆண்டில், பெல்ஜிய காங்கோவின் தலைநகராக இருந்த காங்கோ நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள பாமா நகர் தலைநகராக உயர்ந்தது. "லியோ" அல்லது "லியோபோல்ட்" எனப் பெயரிடப்பட்ட இந்த நகரம், ஒரு வணிக மையமாக மாறி காலனித்துவ காலத்தில் மிக வேகமாக வளர்ந்தது. 1960 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் சுதந்திரம் பெற்ற, காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) அதன் முதல் பிரதம மந்திரியாக பேட்ரிஸ் லுமும்பாவைத் தேர்ந்தெடுத்தது. அதன்பின் 1965 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பெல்ஜியத்தின் உதவியுடன், காங்கோவில் ஜோசப்-டீஸிரே மோபூட்டு அரசின் அதிகாரத்தை கைப்பற்றினார். நாட்டில் மக்கள் மற்றும் இடங்களின் பெயர்களை ஆப்ரிக்கப் பெயர்களாகச் சூட்டுவது பற்றிய செயல்களை இவர் ஆரம்பித்தார். இதன்படி 1966 ஆம் ஆண்டில், லியோபோல்ட் என்ற பெயரை கின்ஷாசா என மாற்றியமைத்தார். காங்கோ மக்களாட்சி குடியரசின் நிர்வாக மற்றும் எழுத்து மொழியாக பிரெஞ்சு மொழியே உள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசின் 26  மாநிலங்களில் ஒன்றான கின்ஷாசாவின் புகழ் பிரான்சில் உள்ள பாரிசு நகரைப் போன்றது. கின்ஷாசா நான்கு மாவட்டங்களாகவும், 24 நகராட்சி மன்றங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நைல் நதிக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டத்தில் இரண்டாவது நீளமான ஆறான காங்கோ ஆறு நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இக்கண்டத்தின் மிகப்பெரிய நீர் வெளியேற்றத்தைக் கொண்டுள்ள ஆறும் காங்கோ ஆறு தான். காங்கோ நதிக்கரையில் உள்ள ஆப்ரிக்க நாடுகளின் நகரங்களுக்கு நீர்மின் உற்பத்தி சக்தியை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான நதியாக இந்த நதி விளங்குகிறது. கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் கும்பல் வன்முறை போன்ற, குற்றவியல் நடவடிக்கைகளின் அடிப்படையில், 2004 ஆம் ஆண்டில் கின்ஷாசா ஆப்பிரிக்காவின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. கின்ஷாசாவின் கொலை விகிதம் 1,00,000 க்கு 112 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தெருவோர சிறார்

தெருவில் வாழ்கின்ற யாருமற்ற அனாதைக்குழந்தைகள் பெரும்பாலும் காவல்துறை மற்றும் இராணுவத்தால் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். கின்ஷாசாவின் தெருக்களில் வாழும் சுமார் 20,000 குழந்தைகள், ஏறக்குறைய நடைபாதையில் வாழும் பிச்சைக்காரர்களாகவும், சிலர் தெருவில் பொருள்களை விற்பனை செய்பவர்களாகவும் உள்ளனர். முன்னர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்நாட்டுப் போரினால் அனாதையானவர்களாக இருந்தனர். தெருவோர சிறார், மற்றும் பெண்களின் சதவீதம் யுனிசெப் கணக்கின்படி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கல்வி

கின்ஷாசா பல உயர்தர கல்விநிறுவனங்கள், கட்டிட பொறியியல்,  மருத்துவர்,  செவிலியர், இதழியல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நகரத்தில் மூன்று பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒரு கலைக் கல்லூரியும் உள்ளது. காங்கோ குடியரசில் மொத்த மக்களில், நான்கில் மூன்று பங்கினர் கிறிஸ்தவர்கள் என்பதும், அதில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் நாட்டின் மொத்த கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 56 இலட்சம் புலம்பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ள காங்கோ குடியரசின் இன்றையத் துயர நிலைகள் குறித்து ஏற்கனவே பலமுறை தன் கவலையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். காங்கோவில் மொத்தம் 4,602 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், கிட்டத்தட்ட 1,500 பங்குத்தளங்கள் மற்றும் 48 மறைமாவட்டங்களில் பணிபுரிகின்றனர், மேலும் பல Fidei Donum காங்கோ அருள்பணியாளர்கள் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.

தென்சூடான்
தென்சூடான்

தென்சூடானில் கிறிஸ்தவம்

முதன் முதலில் ஆறாம் நூற்றாண்டில் Byzantium என்னும் பழங்கால கிரேக்க வழிபாட்டு முறை ஆலயத்தால் தென் சூடானில் கிறிஸ்தவம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் Coptic வழிபாட்டுமுறையினரால் வளர்ந்து வந்த கிறிஸ்தவம், பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் நுபியாவின் கிறிஸ்தவ அரசாட்சியோடு, கிறிஸ்தவம் ஏறக்குற முற்றிலுமாக மறைய ஆரம்பித்தது. ஒரு சில பிரான்சிஸ்கன் குழுக்கள் மட்டுமே இப்பகுதியில் எஞ்சியிருந்தன. பின் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தாலிய மறைப்பணியாளர்களான புனித டேனியல் கொம்போனி(1831-1881), இயேசுவின் திருஇருதய மறைப்பணியாளர்கள், நைக்ரிசியாவின் பக்தியுள்ள அன்னையர் சபை நிறுவனர் ஆகியோரால் மீண்டும் கிறிஸ்தவம் இப்பகுதியில் வளர ஆரம்பித்தது. இவர்களின் தீவிர மறைப்பணி செயல்பாடுகளால் 1901ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து,  தென்சூடான் மக்களின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தி கிறிஸ்தவத்தை விரிவுபடுத்த அனுமதித்தது. ஆங்கிலோ-எகிப்திய ஆட்சியிலிருந்து சூடான் சுதந்திரம் பெற்றதற்குப் பின் இஸ்லாமியமயமாக்கல் மற்றும் அரேபியமயமாக்கல் கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு, கிளம்பி பிரிவினைவாத இயக்கத்தைத் தூண்டியது. 2011 ஆம் ஆண்டு வாக்கெடுப்புக்குப் பிறகு தென்சூடான் சுதந்திரம் பெற்றது.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு

தென்சூடானிய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக 52 விழுக்காடு உள்ளனர். அவர்களுக்கு அடுத்த படியாக ஆங்கிலிகன்கள், பிரஸ்பீடிரியன்கள், பிற கத்தோலிக்க சபை (புராட்டஸ்டன்ட்) பிரிவுகள், ஆர்த்தடாக்ஸ் (காப்டிக், எத்தியோப்பியன்) மற்றும் கிரேக்க-ஆர்த்தடாக்ஸ்) 1விழுக்காடிற்கும் குறைவாக உள்ளனர். பாரம்பரிய ஆப்பிரிக்க மதங்களைப் பின்பற்றுபவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்

மத சுதந்திரம்

தென்சூடான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து, உள்ளூர் தலத்திருஅவை முழு மத சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது, மேலும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் தன்னை மறுசீரமைத்து அதன் மேய்ப்புப்பணிகளை மேற்கொள்ள முடிகிறது. தென்சூடான் அரசியலமைப்பு, வழிபாட்டு சுதந்திரம் மற்றும் மதங்களின் சமத்துவத்தை வெளிப்படையாக அங்கீகரித்து திருப்பீடத்துடன் நல்லுறவு கொண்டு செயல்பட்டு வருகின்றது.  பல சந்தர்ப்பங்களில், உள்ளூர் அரசியல் தலைவர்கள், தென்சூடான் சமூகத்தின் மனித, சமூக மற்றும் குடிமை வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பிற்காகவும்,  அமைதி மற்றும் நாட்டைக் கட்டியெழுப்ப கிறிஸ்தவ தலத்திருஅவைகள் வழங்கிய ஆதரவிற்காகவும் பாராட்டியுள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாக அவ்வப்போது உரசல்களும் திருஅவையிலிருந்து வரும் விமர்சனங்களை தடுக்கவும் அதிகாரிகளின் முயற்சிகளும் உள்ளன. 2013 இல் வெடித்த புதிய உள்நாட்டுப் போர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சில கத்தோலிக்க வானொலிகளை தற்காலிகமாக மூடுவதற்கு ஆளும் சூடான் மக்கள் விடுதலை இராணுவம் (SPLA) உத்தரவிட்டபோது இதற்கு ஒரு உதாரணமாகும்.  

தென்சூடான் தலத்திருஅவை தலைவர்கள்
தென்சூடான் தலத்திருஅவை தலைவர்கள்

தெற்கு சூடானில் அமைதி மற்றும் வளர்ச்சி

ஆப்ரிக்க நாடு சுதந்திரத்திற்காக போராடிய காலத்திலிருந்தே, தென்சூடானில் உள்ள தலத்திரு அவைகளில் அமைதி நிலவ தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை, மற்றும் தென் சூடானின் தேவாலயங்களின் கவுன்சில் (SSCC), இதற்காக பெரிதும் பணியாற்றினர் என்பதும், தற்போதைய அரசியல் மோதல்கள் மற்றும் இன மோதல்களுக்கு மத்தியில் உரையாடல், குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இன்றுவரை ஒத்துழைப்பு தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

2011ம் ஆண்டு தனி நாடாக உருவாக்கப்பட்டு, 2013ம் ஆண்டிலிருந்து மோதல்களைச் சந்தித்து, 4 இலட்சம் பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் தென் சூடான் நாட்டு அரசியல் தலைவர்களை, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை. அவ்வேளையில், அவர்கள்முன் மண்டியிட்டு, அமைதிக்காக அவர்களின் பாதங்களை முத்தமிட்டதும் குறிப்பிடத்தக்கது.. பிப்ரவரி 5ஆம் தேதி தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்யும் திருத்தந்தை ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  திருத்தந்தையின் இந்த 40 வது அமைதியின் திருத்தூதுப் பயணம் நல்ல முறையில் நடந்தேற இறைவனின் ஆசீரை சிறப்பாக வேண்டுவோம்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2023, 13:11