நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருந்த ஊழியருக்கு நன்றிசொல்வோம்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக, சனவரி 2, இத்திங்கள் காலை முதல், சனவரி 4, வருகிற புதன் வரை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் வைக்கப்படுகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

தனக்குமுன்பு கத்தோலிக்கத் திருஅவையில் தலைமைத்துவப் பணியாற்றிய, மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை சனவரி 01, இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரையிலும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருந்த இந்த ஊழியருக்கு ஒன்றுசேர்ந்து நாம் நன்றிசொல்வோம் என்று கூறினார்.

இப்புதிய ஆண்டை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்துள்ள இவ்வேளையில், நம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காக அவ்வன்னையின் பரிந்துரையைக் கேட்போம், நற்செய்திக்கும் திருஅவைக்கும் பிரமாணிக்கமாய் இருந்த இந்த பணியாளரைக் கொடையாகத் தந்த கடவுளுக்கு, ஒரே இதயம் மற்றும் ஒரே ஆன்மாவோடு நன்றிசொல்வோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் மரியா, இறைவனின் அன்னை பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரையிலும், டிசம்பர் 31, இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கானின் Mater Ecclesiae துறவு இல்லத்தில் இறைபதம் சேர்ந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை நினைவுகூர்ந்தார். அத்திருத்தந்தை அன்று உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு இறைத்தந்தையிடம் சென்றார். காலை பத்து மணிக்கெல்லாம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வில்லத்திற்குச் சென்று அத்திருத்தந்தையின் உடல் முன்பாக அமர்ந்து செபித்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக, சனவரி 2, இத்திங்கள் காலை முதல், சனவரி 4, வருகிற புதன் வரை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் வைக்கப்படுகிறது.

சனவரி 5, வருகிற வியாழன் உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றுவார்.

அனைவரோடும் உரையாடல் மேற்கொள்வதில் திறன் படைத்தவர்

மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அனைவரோடும் உரையாடல் மேற்கொள்வதில் திறன் படைத்தவர் மற்றும், அதற்குச் சாட்சியாக விளங்குபவர் என்று பாராட்டப்படுகிறார்.

ஓர் இறையியலாளர் மற்றும், ஒரு திருத்தந்தை, தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ நம்பிக்கையின் காரணகாரியம் குறித்துச் சிந்தித்தார் மற்றும், போதித்தார் என்றால் அவர் ஜோசப் இராட்சிங்கர் அதாவது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மட்டுமே எனவும், அத்திருத்தந்தை தனது ஆன்மிக உயிலின் இறுதி வரிகளிலும் இது பற்றியே பேசியிருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2023, 15:31