திருக்காட்சிப் பெருவிழா - திருத்தந்தையின் மறையுரை

நம்பிக்கையின் தந்தையாம் ஆபிரகாம் முதல் விண்மீன்களைப் பின்தொடர்ந்த ஞானியர் வரை அனைவருக்கும் நம்பிக்கை என்பது பயணமாகவே அமைந்துள்ளது – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

குழப்பான கேள்விகள், ஆபத்தான மற்றும் வியப்புக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்ட ஞானியர் போல நாமும் இறைவனை நோக்கித் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று திருக்காட்சிப் பெருவிழா மறையுரையின் போது கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 06 வெள்ளிக்கிழமை திருக்காட்சிப் பெருவிழாவை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்தபோது இவ்வாறுக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறந்திருக்கும் பாலன் இயேசுவின் முன் அமைதியாக நின்று, அவரது அன்பிற்கு நம்மைக் கையளிக்கவும், அவரது பேரிரக்கத்தால் நாம் மீண்டும் உருவாக்கப்படவும் அருள் வேண்டி ஞானிகள் போன்று அவரைத் தெண்டனிட்டு வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

மனித குலத்தின் இரவுகளை வெளிச்சமாக்கவும் அனைத்து மக்களுக்கும் அறிவூட்டவும் உதித்துள்ள இயேசு எங்கே பிறந்துள்ளார் என்ற ஞானிகளின் கேள்விகள் நமது உள்ளத்திலும் எழுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீமையின் மாயை, வீண் விவாதங்கள் போன்றவற்றிற்கு முன் பணிந்து போகாதபடிக் கவனமாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நம்பிக்கையின் பயணம்

கடவுளின் அருளால் அமைதியின்மையில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும் போதே நமது நம்பிக்கையின் பயணம் தொடங்கும் எனவும், ஆபிரகாம் முதல் விண்மீன்களைப் பின்தொடர்ந்த ஞானியர் வரை நம்பிக்கை என்பது பயணமாகவே உள்ளது எனவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

மற்றவர்களுடனான உறவுகள், எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், எதிர்கொள்ளும் அச்சங்கள், உண்டாகும் உடல் மன துன்பங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள முன்வரும் போது, எனது மகிழ்ச்சி எங்கே? நான் விரும்பும் முழு வாழ்க்கை எங்கே?  என்பன போன்ற பல கேள்விகள் நம்முள் எழுகின்றன எனவும், நம்முள் நம் இதயத்திலிருந்து எழும் இக்கேள்விகள் கடவுளைத் தேடுவதற்கு நம் மனங்களைத் திறக்கின்றன என்றும் விவரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதையும் சிந்தனை செய்யாதே இன்பமாக வாழ் என்று பொய்யான இன்பத்தை வலியுறுத்தும் உலகப் போக்குகளை ஞானிகள் கேட்டு நடந்திருந்தால் இறைவனை ஒருபோதும் சந்தித்திருக்க முடியாது என்றும்,  நீண்ட பயணம் மற்றும் சோர்வுற்ற தேடலின் முடிவில், ஞானியர்கள் தங்களது பயணக் களைப்புக்களை மரியாவோடு இருந்த பாலன் இயேசுவைப் பார்த்து  தீர்த்துக் கொண்டது போல நாமும் நமது வாழ்வின் இலக்காம் இறைவனைச் சந்தித்து இளைப்பாற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2023, 10:41