நோயாளர்களை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நோயாளர்களை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  

பரிவிரக்கமும் கரிசனையுமே நோயாளர்களுக்குத் தேவை : திருத்தந்தை

இவ்வுலகில் நோயாளர்கள்மீது இரக்கம் காட்டுவதற்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் நல்ல சமாரியரை எடுத்துக்காட்டாகக் கொள்ளுங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பலவீனம் மற்றும் நோயின் அனுபவத்தின் வழியாகக் கடவுளின் வழிகளான நெருக்கம், பரிவிரக்கம், இளகிய மனம் ஆகியவற்றில் ஒன்றிணைந்து நடக்கக் கற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 11, உலக நோயாளர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10, இச்செவ்வாயன்று வழங்கியுள்ள 31-வது உலக நோயாளர் தினச் செய்தியில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளர்களை நிராகரிக்கும் இவ்வுலகில், அவர்கள்மீது இரக்கம் காட்டுவதற்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் நல்ல சமாரியரை எடுத்துக்காட்டாகக் கொள்ளும்படி அனைத்துக் கத்தோலிக்கர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரிவிரக்கமும் கரிசனையுமே நோயாளர்களுக்கு அவசியம் தேவை என்றும், அதனை அவர்களுக்கு வழங்குவதே நமக்கான கடவுளின் அழைப்பு என்பதையும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோய் நமது மனித வாழ்வில் ஒருபகுதியாக இருக்கும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு நாம் கவனிப்பும் இரக்கமும் காட்டப்படாதபோது, அது மனிதாபிமானமற்றச் சூழலை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

நல்ல சமாரியர் உவமையில் கள்வர்கள் கையில் அகப்பட்ட அந்த மனிதரின் நிலைதான் இன்றைய உலகில் பெரும்பாலான நோயாளர்களுக்கு நேரிடுகின்றது என்று உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் உடன்பிறந்த உறவுநிலை மறுக்கப்படுகின்றது என்பதையும் அநீதியும் வன்முறையும் மனித வாழ்வையும் மனித மாண்பையும் வெகுவாக சிதைத்தழிக்கிறது என்பதையும் இயேசு கூறும் இவ்வுவமை வெளிப்படுத்துகிறது என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கள்வர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராக விடப்பட்ட அம்மனிதருக்கு சமாரியர் உடன்பிறந்த அன்பை வெளிப்படுத்தி அவரை நான்றாகக் கவனித்துக்கொண்டார் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சமாரியர் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கின்றார் என்றும், இவ்வுலகை உடன்பிறந்த உறவுநிலை கொண்டதாக மாற்றியுள்ளார் என்றும் அச்செய்தியில் விளக்கியுள்ளார்.

நோயாளர்களுக்கு இறைவேண்டல் செய்வதற்கும், அவர்களுடன் உடன் இருப்பதற்கும் உலக நோயாளர் தினம் நம்மை அழைக்கிறது என்றும், இது கடவுளின் மக்கள் அனைவருக்கும், நலப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயலாக அமைகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2023, 13:34