திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இறைவார்த்தையால் பிறரின் உள்ளங்களைப் பற்றியெரியச் செய்வோம்!

இயேசுவின் அன்புத் தீயில் பற்றியெறியாமல் ஒருவர் உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றி எல்லோரிடமும் அறிவிக்க இயலாது என்பது உணர்ந்துகொள்வோம்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகில் உள்ள அனைத்து மறைத்தூதுப் பணியாளர்களுக்கும், குறிப்பாக எல்லாவிதமான துயரங்களையும் தாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் கிறிஸ்துவில் தனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 25, இப்புதனன்று, தான் வழங்கியுள்ள 2023-ஆம் ஆண்டிற்கான 97-வது உலக மறைபரப்பு ஞாயிறுக்கான செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ‘பற்றியெரியும் இதயங்கள்... நகர்ந்து செல்லும் கால்கள்’ (Hearts on fire, feet on the move - லூக்கா 24:13-35) என்ற தலைப்பை அந்நாளுக்கான கருப்பொருளாகவும் வழங்கியுள்ளார்.  

லூக்கா நற்செய்தியில் கூறுப்பட்டுள்ள எம்மாவு சீடர்களை இயேசு சந்திக்கும் நிகழ்வை மையப்படுத்தி 2023-ஆம் ஆண்டிற்கான உலக மறைபரப்பு ஞாயிறுக்கான சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று தலைப்புகளை மையப்படுத்தி அவற்றை விரிவுபடுத்தியுள்ளார்.

01. அவர் மறைநூலை விளக்கியபோது நமது இதயங்கள் பற்றியெரிந்தன

அன்று போலவே இன்றும், உயிர்த்தெழுந்த இயேசு மறைத்தூதுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் இதயங்களை பற்றியெறியச் செய்வதுடன், அவர்களுடன் உடன் பயணிக்கிறார் என்றும், குறிப்பாக, அவர்கள் திசைதிருப்பப்பட்டு, ஊக்கம் இழந்து, தங்களைச் சூழ்ந்திருக்கும் துயரங்களின் அச்சம் அவர்களை மூழ்கடிக்க முற்படும்போது, ​​அவர்களுடன் மிகவும் நெருக்கமாக நடந்து செல்கிறார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு நண்பர்களே, உயிர்த்த இயேசு எப்போதும் உங்களுடன் இருக்கிறார். உங்கள் தாராள மனத்தையும் தொலைதூர நாடுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக நீங்கள் செய்யும் தியாகங்களையும் அவர் காண்கிறார் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியற்ற நிலையையும் துன்ப துயரங்களையும் தவிர்க்க முடியாத நம்வாழ்வில், இயேசு தனது நண்பர்களாகிய சீடர்களிடம் கூறிய வார்த்தைகளில் நாமும் நம்பிக்கை வைப்போம் என்று விளக்கியுள்ளார்.

உயிர்த்த ஆண்டவர் மறைநூலின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக் கூறும்போது அவருடன் இணைந்திருக்க நாம் எப்போதும் தயாராக இருப்போம் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம் இதயங்களை நமக்குள் பற்றி எரியச் செய்வாராக; அவருடைய தூய ஆவியாரிடமிருந்து வரும் வல்லமையினாலும் ஞானத்தினாலும் அவருடைய மீட்பின் மறையுண்மைகளை நாம் உலகுக்கு அறிவிக்கும்படி, அவர் உள்ளங்களை ஒளிரச்செய்வாராக! என்றும் கூறியுள்ளார்.

02. அவர் அப்பதைப் பிட்கும்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

உயிர்த்த இயேசு அப்பதைப் பிடுபவர் மட்டுமல்ல, மாறாக, அதனை நமக்குப் பகிர்ந்து கொடுப்பவருமாகவும் இருக்கின்றார் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு சீடரும் தூய ஆவியாரின் செயல்பாட்டின் வழியாக, இயேசுவைப் போல, அப்பத்தை பிடவும், உலகத்திற்காக அப்பத்தின் வடிவில் தன் வாழ்வையே வழங்கவும் தயாராக இருக்க அழைக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

பசியுற்று இருப்பவர்களுடன் கிறிஸ்துவின் பெயரால் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுப்பது என்பது ஏற்கனவே நாம் மேற்கொண்டு வரும் நமது கிறிஸ்தவ பணியின் அங்கம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது வாழ்விற்கும் திருஅவையின் மறைத்தூதுப் பணிக்கும் அர்த்தம் கொடுக்கும் கிறிஸ்துவின் மறையுடலாகிய அப்பத்தை பகிர்ந்து கொடுக்கவேண்டியது இதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

03. இயேசுவுடனான தங்களின் அனுபவங்களை எடுத்துரைக்க அவர்கள் அந்நேரமே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்

மறைபரப்புப் பணியின் முதன்மை மற்றும் முக்கிய ஆதாரம், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை மறைநூலிலும், நற்கருணையிலும் அறிந்து கொண்டவர்கள், அவருடைய  அன்புத்தீயை இதயத்திலும், அவருடைய ஒளியைத் தங்கள் பார்வையிலும் சுமந்து செல்கின்றனர் என்றும், இதனால், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், இருண்ட தருணங்களிலும் கூட, அவரின் என்றுமுள்ள வாழ்க்கைக்கு அவர்கள் சாட்சியாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆகவே, பற்றி எரியும் இதயங்களுடன், கண்களை அகலத் திறந்து, விரைந்து செல்லும் கால்களுடன் மீண்டும் புறப்படுவோம் என்று அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையால் மற்றவர்களின் இதயங்களை பற்றி எரியச் செய்யவும், கிறிஸ்துவின் மறைநூலில் பிறரின் கண்களைத் திறக்கவும், கிறிஸ்துவுக்குள் கடவுள் அருளிய அமைதி மற்றும் மீட்பின் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்த நடக்கவும் அனைவரையும் அழைப்போம் என்றும் கூறி தனது மறைபரப்பு ஞாயிறு செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 13:30