மனித உடன்பிறப்பு உணர்வுடன் கூடிய அமைப்புக்கள் கூட்டமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை மனித உடன்பிறப்பு உணர்வுடன் கூடிய அமைப்புக்கள் கூட்டமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

உலகைப் புனிதப்படுத்தும் நோக்கத்துடன் பொதுநிலை அமைப்புக்கள்

கிறிஸ்துவின் காலடித் தடங்களில் நடைபோடுதல், ஒன்றிணைந்து நடைபோடுதல், நற்செய்தி அறிவித்தபடியே நடைபோடுதல் என்ற மூன்று படிகளின் தேவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உலகைப் புனிதப்படுத்தும் நோக்கத்துடன் திருஅவையின் பொதுநிலை அமைப்புக்கள் புளிக்காரமாகச் செயல்பட்டுவருவது குறித்து தன் பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மறைமாவட்டங்களில் இயங்கிவரும் மனித உடன்பிறப்பு உணர்வுடன் கூடிய அமைப்புக்கள் கூட்டமைப்பின் அங்கத்தினர்களை ஜனவரி 16ஆம் தேதி திங்கள் கிழமை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2000ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு, 2025ஆம் ஆண்டு நம்பிக்கையின் திருப்பயணிகள் என்ற தலைப்பில் இடம்பெற உள்ள திருஅவையின் யூபிலி ஆண்டோடு தன் யூபிலி ஆண்டை சிறப்பிக்க உள்ளதையும் நினைவுக்குக் கொணர்ந்தார்.

ஏறக்குறைய 3200 பதிவுசெய்யப்பட்ட உடன்பிறந்த உணர்வுடன் கூடிய அமைப்புக்கள் 20 இலட்சம் அங்கத்தினர்களோடு இத்தாலி முழுவதும், அனைத்து மறைமாவட்டங்களிலும் பணியாற்றிவருவது குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, மூன்று வழிமுறைகளை அவர்களுக்கு முன்வைத்தார்.

கிறிஸ்துவின் காலடித் தடங்களில் நடைபோடுதல்,  ஒன்றிணைந்து நடைபோடுதல், நற்செய்தி அறிவித்தபடியே நடைபோடுதல் என்ற மூன்று படிகளை அவ்வமைப்பினருக்கு சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயேசுவின் பாதையில், அவரைப்போல் பிறரன்புடன் செயல்படவேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்தார்.

ஒருவருக்கொருவர் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணைந்து நடைபோடுதல், அவ்வாறு நடைபோடும்போது சான்று வாழ்வின் வழியாக நற்செய்தியை அறிவித்தல் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மை மன்னித்து, நமக்காக என்றும் காத்திருக்கும், மற்றும் நம்மை அளவுக்கு அதிகமாக அன்புகூரும் இறைவனின் மறைப்பணியாளர்களைத் தொடர்ந்து செயல்படுங்கள் என்ற அழைப்பை புதுப்பிக்க விரும்புகிறேன் என தன் உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2023, 14:32