நம்பிக்கையின் சுடராக இருங்கள் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒவ்வொருவரின் இதயங்களில் நம்பிக்கையைக் கொண்டுவரும் சுடராகவும், திருத்தூதர் பேதுரு போல துணிவுடன், கிறிஸ்து வெளிப்படுத்திய மாபெரும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 24 வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் Pro Petri Sede என்னும் அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்து மகிழ்ந்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவிற்காக இரத்தம் சிந்திய திருத்தூதர் பேதுருவின் பெயர் கொண்ட அவ்வமைப்பின் செயல்பாடுகளுக்குத் தன் பாராட்டினையும் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்காகப் போராடும் திருஅவையின் மறைப்பணி நடவடிக்கைகளில் ஈடுபடும் அவ்வமைப்பினர், மனிதனின் தோற்றம், சமூக தரம் எதுவாக இருந்தாலும் அவனது நேர்மை மற்றும் மாண்பு பாதுகாக்கப்பட, தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் சமூக மற்றும் தொண்டுப்பணிகள், திருஅவையின் செயல்பாடுகள் போன்றவற்றிற்கு நிதி மற்றும் ஆன்மிக பங்களிப்பை வழங்கும் அவ்வமைப்பினர் ஒவ்வொருவரும் அமைப்பின் முன்னோடிகள் காட்டிய அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடைமை, தொழில், மரியாதை, அதிகாரம் போன்றவற்றின் கட்டுப்பாடற்ற ஓட்டப்பந்தயத்தில், பலவீனமானவர்கள் மற்றும் சிறார் சில நேரங்களில் புறக்கணிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறார்கள் என்றும், “ஓட வேண்டும், அனைத்தையும் ஒரேயடியாக வென்றுவிட வேண்டும் என்ற பேராசையில் பின் தங்கியிருப்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இத்தகைய ஓட்டத்தில் முதியோர், கருவில் இருக்கும் சிசு, உடல் ஊனமுற்றோர் ஏழைகள், அனைவரும் பயனவற்றவர்களாக வீணானவர்களாகக் கருதப்படுகின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, திருஅவை ஏழைகளுக்கான முன்னுரிமைத் தேர்வை ஆதரிக்கிறது என்றும் கூறினார்.
வாழ்விற்கு சுவையூட்டுபவர்கள்
உயிர்த்தெழுந்த இயேசுவின் அமைதி, மற்றும் மகிழ்ச்சியைத் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்ல நற்செய்தியின் வழியாக ஊக்கமளிக்கும் அவ்வமைப்பினர், திருஅவையின் வாழ்வில் தொண்டுப்பணிகள் வழியாக உப்பாகவும் வெளிச்சமாகவும் மாறி பலருடைய வாழ்க்கைக்கு சுவையை அளிக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
மனித குடும்பம் மற்றும் அதன் பொதுவான இல்லம் பற்றிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், போர்கள், மக்களின் இடப்பெயர்வு, வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களின் வேதனைக்குரல் மற்றும் அழுகைக்கு செவிமடுக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, போர் மற்றும் மோதல்கள் நிறைந்த நாடுகளில் தீமையான நிறுத்தப்படுவதன் அவசரம், சுற்றுச்சூழல் மாற்றம், பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துக்கொள்ளல் போன்றவற்றையும் வலியுறுத்தினார்.
தாராள மனப்பான்மை மற்றும் பிறரிடம் கவனம் செலுத்துவதன் வழியாக வெளிப்படும் கிறிஸ்தவ வாழ்க்கையானது, மனித அமைதி மற்றும் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் தனிமனிதவாதம், சுயநலம், அலட்சியம் ஆகியவற்றின் பொதுவான சூழலுக்கு எதிராக போராட இன்று அனைவரையும் அழைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்