விளையாட்டு என்பது வாழ்க்கைக்கான ஒரு உருவகம் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
விளையாட்டில் பயிற்சி, ஒழுக்கம், செயல் நோக்கம் ஆகிய மூன்றும் முக்கியமான தேவைகள் என்று விளையாட்டு குழு ஒன்றிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 9, இவ்வியாழனன்று, வத்திக்கான் Amateur விளையாட்டுச் சங்கத்தினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தருணத்தில் 1972-ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட வத்திக்கான் கால்பந்து விளையாட்டு (championship) நிறுவப்பட்ட 50வது ஆண்டின் நிறைவை நினைவு கூர்கிறோம் என்றும் தெரிவித்தார்.
பந்தயத்தில் போட்டியிடுவோர் மற்றும் அவர்களின் நோக்கம் குறித்து புனித பவுலடியாரின் கடிதங்களிலிருந்து (காண்க 1கொரி 9:24-25,பிலி 3:12) பயிற்சி, ஒழுக்கம், செயல்நோக்கம் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி தனது சிந்தனைகளை அவ்விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதலாவது, பயிற்சி
பயிற்சி என்றதும், உடனடியாக நம் நினைவுக்கு வருவது உழைப்பு, வியர்வை மற்றும் தியாகம். இவை மூன்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஒருவர் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் ஆர்வம். Amateur என்று அழைக்கப்படுகிறது என்றும் இது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கான அன்பை துல்லியமாக வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மனப்பான்மை இருந்தால், போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் இல்லையெனில், போட்டியின் நோக்கம் சிதைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
இரண்டாவதாக, ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது கல்வியையும் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளது. ஒழுக்கமான விளையாட்டு வீரர் என்பவர் விதிகளை மட்டும் கடைப்பிடிப்பவர் அல்ல, மாறாக, அது ஒருவர் கற்றுக்கொள்ள விரும்புவதையும் தன் நல்லொழுக்கத்தால் எல்லோருக்கும் விருப்பமானவராக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் காட்டுகிறது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு உண்மையான விளையாட்டு வீரர் எப்பொழுதும் கற்றுக்கொள்ளவும், வளரவும், தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாவதாக, செயல்நோக்கம்
இது நம்மிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான மனநிலை. இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்வதற்குத்தான் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். போட்டியில் பங்கேற்பது என்பது அதில் நாம் வெற்றிபெற்றோமா அல்லது தோல்வியடைந்தோமா என்பதல்ல, ஆனால், அப்போட்டியில் நாம் எந்தளவுக்கு உண்மையாக இருந்தோம் என்பதே மிகவும் முக்கியம் என்றும் விவரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்