போரால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் போரால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள்  

துயருறும் உக்ரேனிய மக்களுடன் நெருக்கமாக இருப்போம்

இடிபாடுகளில், அதாவது, அப்பாவி மக்களின் துயரங்களில் கட்டப்பட்ட எதுவும் உண்மையான வெற்றியாக இருக்க முடியாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மதியற்ற மற்றும் கொடூரமான உக்ரைன் போரை நிறுத்துங்கள் என்றும் அமைதிக்கான வழிகளைத் தேடுங்கள் என்றும்,  வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 22, இப்புதனன்று, வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கில் நிகழ்ந்த புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், போர்நிறுத்தத்தை எட்டுவதற்கும் மற்றும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 24, வெள்ளியுடன் உக்ரைன் மீதான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது என்று திருப்பயணிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இது ஒரு சோகமான ஆண்டாகவே நிறைவடைந்துள்ளது என்று பெரிதும் கவலை தெரிவித்தார்.

இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், புலம்பெயர்ந்தோர், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அழிவுகள், பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தனக்குத்தானே போரின் சோகத்தைப் பேசுகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அமைதியின் கடவுள், இந்தக் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அனைத்தையும் மன்னிப்பாராக என்றும் கூறினார்.

துயரத்துக்குள்ளாகியுள்ள உக்ரேனிய மக்களுடன் நாம் நெருக்கமாக இருப்போம் என்றும் போரை நிறுத்துவதற்கு சாத்தியமான அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா என்று துயருறும் அம்மக்கள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், போர் நிறுத்தத்தை எட்டவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நாட்டுத் தலைவர்களை தான் கேட்டுக்கொள்கிறேன் என்றும், இடிபாடுகளில், அதாவது, அப்பாவி மக்களின் துயரங்களில் கட்டப்பட்ட எதுவும் உண்மையான வெற்றியாக இருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2023, 14:31