pentathlon விளையாட்டுக் கூட்டமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் pentathlon விளையாட்டுக் கூட்டமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

வாழ்வின் இலக்குகளை அடைய உதவும் விளையாட்டு – திருத்தந்தை

அன்பைப் பெறவும் கொடுக்கவும் தெரிந்த இதயத்தின் பணியைச் சிறப்பாகச் செய்து வரும் Pentathlon விளையாட்டுக் கூட்டமைப்பு தன் உறுதியான ஒற்றுமையைத் தொடர்ந்து வெளிப்படுத்த முயற்சிக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

பொறுமை, உடற்பயிற்சி, படைப்பாற்றல் மற்றும் விடாமுயற்சியுடன்  நம்மை நாம் மேம்படுத்த முடியும் என்பதை விளையாட்டு நமக்கு கற்பிக்கின்றது என்றும், இதன் வழியாக சிந்திக்க முடியாத இலக்குகளை நம்மால் அடைய முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 10, வெள்ளிக்கிழமை இத்தாலியின் Pentathlon என்னும் விளையாட்டு கூட்டமைப்பின் மேலாளர்கள் மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து மகிழ்ந்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாள்வீச்சு, நீச்சல், குதிரை சவாரி, துப்பாக்கிச் சூடு, ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த விளையாட்டுக் கூட்டமைப்பானது நவீன காலத்தில் மாற்றியமைக்கப்பட்ட பழமையான ஒழுக்க விதிமுறைகளைக் கொண்டு இயங்குகின்றது என்றும், உடல் மற்றும் உள்ளத்தின் பரிமாணங்களை  விளையாட்டின் வழியாக வெளிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்
விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உதவிக்காக "Bambino Gesù" குழந்தை இயேசு மருத்துவமனைக்குதத் தொடர்ந்து உதவி வரும் இக்கூட்டமைப்பு, வாழ்வதன் அர்த்தம், நமது உடனிருப்பு, உறவுகளுடன் நாம் கொண்டிருக்கும் இணைப்பு ஆகியவற்றை தொண்டுப்பணிகள் வழியாக ஆற்றுவதாகக் கூறி அதன் செயல்பாடுகளுக்குத் தன் நன்றியினையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பைப் பெறவும் கொடுக்கவும் தெரிந்த இதயத்தின் பணியைச் செய்து வரும் இக்கூட்டமைப்பு உறுதியான ஒற்றுமையை இச்செயலால் தொடர்ந்து வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் விளையாட்டுப் போட்டியின் வெற்றியை விட இது வாழ்வில் அதிக வெற்றியைத் தரும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்விச் செயல்பாட்டை, விளையாட்டின் வழியாக அதிகப்படுத்தும் இக்கூட்டமைப்பு, தொடர்ச்சியான பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டிய இயந்திரமல்ல என்றும், அதன் செயல்பாடுகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மதிப்புமிக்க கல்வியின் வழியில் வாழ்க்கையில் நாம் செயல்பட அழைக்கப்படுகிறோம் என்றும், சூழல்கள், உறவுகள், தருணங்கள் போன்றவற்றின்படி செயல்பட்டு பன்முக ஆளுமையை விளையாட்டின் வழியாக வெளிப்படுத்துகின்றோம் என்றும், இது ஒரு வலுவான ஒற்றுமை, ஒரு திடமான மையம், சிறந்த ஒத்திசைவு, மாற்றும் திறன், மாற்றியமைத்தல், நகர்த்துதல் என்பன போன்ற பலதுறைகளில் நிலைத்த தன்மையை முன்வைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2023, 12:06