வன்முறைகளால் வாழ்வை இழந்த மக்களின் குரல்

கணக்கற்ற ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட கொலைகள், குடும்பங்கள் இடம்பெயர கட்டாயப்படுத்துதல், கைவிடப்படுதல், சுரங்கங்களில் கடுமையான வேலையால் சுரண்டப்படுதல், சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல் போன்றவை அனைத்தும் கண்டிக்கத்தக்கவை .

மெரினா ராஜ் – வத்திக்கான்

காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதி மக்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த மிகவும் கொடூரமான நிகழ்வுகளை திருத்தந்தையிடம் பகிர்ந்து கொண்டனர்.

லாடிஸ்லாஸ் கம்பாலே கோம்பி,  என்னும் 17வயதுஇளைஞனின் அனுபவப் பகிர்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. தனது மூத்த சகோதரர் இன்னும் எங்கிருக்கிறார் என்று அறியப்படாத சூழ்நிலையிலும் தந்தை இராணுவ உடை அணிந்த வீரர்களால் கண் எதிரே வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும் தாயார் இராணுவ வீரர்களால்  இழுத்துச்செல்லப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை என்றும் எடுத்துரைத்தார். குறிப்பாக தனது தந்தையின் தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்டு கூடையில் போடப்பட்டதைக் கண்ட அவர் தூக்கமின்றி பல இரவுகள் கழித்ததையும் எடுத்துரைத்தார். தந்தை தாய் மூத்த சகோதரர் யாருமின்றி இரண்டு இளைய சகோதரிகளோடு தனியாக இச்சமூகத்தில் விடப்பட்ட அவர், இத்தகைய கொடுஞ்செயலைப் புரிந்து கொள்வது கடினம் என்றும் மிருகத்தனமான செயல் என்றும் திருத்தந்தையிடம் பகிர்ந்து கொண்டார். உள்ளூர் தலத்திருஅவையின் ஆன்மீக மற்றும் உளவியல் சமூகத் துணையைப் பின்பற்றி, நலமுடன் வாழ்வதாக தெரிவித்த அவர், தன் தந்தையைக் கொன்ற அதே கத்தியை வெற்றியாளராம் கிறிஸ்துவின் சிலுவையின் முன் வைத்து செபித்தார் .

இதேபோல் தொடக்கப் பள்ளியில் படிக்கும் லியோனி என்ற சிறுவன், தன் கண் முன்னால் தனது குடும்பத்தினர் அனைவரையும் கொன்ற கொலையாளிகள் பயன்படுத்திய கத்தியை திருச்சிலுவையின் முன் அர்ப்பணித்தார். மேலும் ஃபிஸ்டன் என்னும் , 13 வயது சிறுவன், தன்னை 9 மாதங்கள் கடத்தி வைத்திருந்து கொலை  துன்பத்திற்கு ஆளாக்கியவர்களை தான் மன்னிப்பதாகவும், சிலுவையில் அறையப்பட்டு வெற்றி பெற்ற கிறிஸ்து  துன்புறுத்துபவர்களின் இதயங்களைத் தொடும்படியும் செபித்தார். கோமாவைச் சேர்ந்த ஒரு பெண்: ஒரு வருடம் ஏழு மாதங்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இறுதியில் நண்பர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் கூறிய அவர் தன்னுடன் கடத்தப்பட்ட மற்ற சிறுமிகள் இன்று வரை  வீடு திரும்பவே இல்லை என்றும் கூறினார்.  

ஆறுதல் கூறும் திருத்தந்தை
ஆறுதல் கூறும் திருத்தந்தை

எல்லா இடங்களிலும் கணக்கற்ற ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட கொலைகள், குடும்பங்கள் இடம்பெயர கட்டாயப்படுத்துதல், கைவிடப்படுதல், சுரங்கங்களில்  கடுமையான வேலையால் சுரண்டப்படுதல், சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல் போன்றவை அனைத்தும் கண்டிக்கத்தக்கவை என்றும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் எடுத்துரைத்தனர். இத்தகைய கொடூரமான சூழலிலும் தலத்திரு அவை தங்களது காயங்களை ஆற்றும் ஒரே அடைக்கலமாக உள்ளது என்றும், அவர்களது பல ஆதரவு மற்றும் ஆறுதல் அளிக்கும் சேவைகளின்  வழியாக தங்கள் இதயங்கள் ஆறுதல்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.  தனது துயரத்தினை அடையாளப்படுத்தும் விதமாக பாய் ஒன்றினை சிலுவையின் கீழ் அர்ப்பணித்தார்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு, குடிபெயர்ந்தோர்முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பெண்கள் மற்றும் 17 சிறார் உட்பட 63 பேர்  ஆயுதக்குழுவினால் கொல்லப்பட்டனர். அதில் உயிர் பிழைத்த ஒருவரின் கடிதத்தை வாசித்தார் அருள்பணியாளர் Guy-Robert Mandro Deholo அக்கடிதத்தில் இறைச்சிக் கடையில் வெட்டப்பட்டுக் கிடக்கும் விலங்குகள் போல மனிதர்களின் உடல்களைத் தான் பார்த்ததாகவும், தொடர்ச்சியான கொள்ளைகள், கொலைகள், கடத்தல்களைப் பற்றிக் கூறிய அவர்,  உடல், மற்றும் ஆன்மீகத்தை  அழிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவது ஒவ்வொரு நாளும் தொடர்கிறது என்றும், எழுதப்பட்டிருந்ததைக் கூறினார்.

தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும், தங்கள் வீடுகளை மீண்டும் கட்ட வேண்டும், மீண்டும் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும், என்று விரும்பும் மக்கள் ஆயுதங்களின் சத்தத்திலிருந்து வெகு தொலைவில் கடவுளின் பிள்ளைகளாக மாண்புடன் தாங்கள் வாழ விரும்புவதாகவும் தெரிவித்து கடிதம் எழுதிய நபரின் பெயர் மற்றும் இடம்பெயர்ந்த மற்ற நபர்களின் பெயரால் சில கத்திகள் மற்றும் சுத்தியல்களை திருச்சிலுவையின் கீழ் வைத்து செபித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் மக்கள் நடுவில்
திருத்தந்தை பிரான்சிஸ் மக்கள் நடுவில்

வெள்ளம் மற்றும் மோதல்கள் தந்த துன்பம்

புகாவுக்கு தென்மேற்கே உள்ள புகோபே நகரத்தைச் சேர்ந்த 16 வயது எமெல்டா வன்முறையாளர்களால் கடத்தப்பட்டு அதிகமாக துன்புறுத்தப்பட்டதாகவும், விலங்குகளின் இறைச்சியுடன் மனித உடல்களும் கலக்கப்பட்டு உண்ண வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதுவே நமது அன்றாட உணவாக இருந்தது. அதை சாப்பிட மறுத்தவர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டனர். என்றும் பகிர்ந்து கொண்டார். எமல்டா. அதன்பின் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முலோங்வே மற்றும் கவிம்விரா நதிகளின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் திருத்தந்தை முன் நினைவு கூர்ந்தார், வெள்ளம் காரணமாக அனைத்தையும்  இழந்தவர்கள், 60 பேர் வெள்ளத்தில் சிக்கியும், 45 பேர் காயமடைந்தும், 3500 வீடுகள் பாதிக்கப்பட்டும், 7700 குடும்பங்கள் தங்க இடமின்றி பேரிடர் முகாம்களில் வாழ்வதையும் எடுத்துரைத்தனர். 3  முதல் 4 குடும்பங்கள், ஒரே வீட்டில் வாழ்கின்றனர். 2019ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான போர்கள் காரணமாக, "Fizi, Mwenga / Itombwe மற்றும் Uvira ஆகிய இடங்களின் மலைப்பகுதிகளில், 3,46,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் எடுத்துரைத்தனர்.

"வன்முறை மற்றும் பிற பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் இப்பகுதிக்கு பயணத்தை மேற்கொள்ள விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு அம்மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்.

இருண்ட கடந்த காலத்தை விட்டுவிட்டு அழகான எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் நாம், நீதியையும் அமைதியையும் கேட்போம், நம்மை துன்பத்திற்கு உள்ளாக்கியவர்கள் செய்த அனைத்தையும் மன்னிப்போம், அமைதியான, மனிதாபிமான மற்றும் சகோதர சகவாழ்வுக்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம் என்று கூறி தனது ஆசீரை வழங்கிய திருத்தந்தை அனுபவங்களைப் பகிர்ந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்த்தித்து ஆசீர்வதித்து ஆறுதலளித்தார்.

நல்லிணக்கத்தின் மற்றும் அர்ப்பணிப்பின் செயல்

திருத்தந்தையின் உரைக்குப் பின்னர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை சாட்சியங்களாகப் பகிர்ந்து கொண்ட மக்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டிற்கான அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த விரும்பி அர்ப்பணிப்பு செபம் ஒன்றை இணைந்து செபித்தார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2023, 14:37