உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருங்கள் : திருத்தந்தை

வன்முறையால் அழிக்கப்பட்டுள்ள அழகான இந்நாட்டில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்து சுடர்விடும் விளக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 5, இஞ்ஞாயிறன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள John Garang கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்பு நிறைத்த சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் நற்செய்தி நம்பிக்கையின் செய்தியாக இருப்பதால், அவரை அறிவிக்கவும், அவரில் உங்களை உறுதிப்படுத்தவும் நான் இங்கு வந்துள்ளேன்.

இயேசு உங்களை அறிந்திருக்கிறார், உங்களை அன்பு கூர்கிறார். நாம் அவரில் நிலைத்திருந்தால், நாம் ஒருபோதும் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனென்றால், நமக்கு ஒவ்வொரு சிலுவையும் உயிர்த்தெழுதலாகவும், ஒவ்வொரு துயரமும்  நம்பிக்கையாகவும், ஒவ்வொரு புலம்பலும் மகிழ்ச்சியாகவும் மாற்றம் பெரும்.

‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்’ மற்றும்’ நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ (மத் 5:13-14) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் வார்த்தைகள் குறித்தும், இயேசுவின் சீடர்களாகிய நமக்கு இந்த உருவங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் குறித்தும் இப்போது சிந்திப்போம்.

உலகிற்கு உப்பு நாம்

உணவுக்கு சுவையூட்ட உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத மூலப்பொருள்தான் எல்லாவற்றுக்கும் சுவையைத் தருகிறது. இந்த காரணத்திற்காக, பண்டைய காலங்களிலிருந்து, உப்பு ஞானத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. என்ன மாதிரியான ஞானத்தை இது எடுத்துக்காட்டுகிறது? இயேசு நற்பேறுகள் குறித்து கற்பித்த உடனே, அவர் உப்பு பற்றிய இந்த உவமையை எடுத்துக்காட்டுகிறார்.

அப்படியானால், நற்பேறுகள்தாம் கிறிஸ்தவ வாழ்க்கையின் உப்பு என்பதை நாம் காண்கிறோம். ஏனென்றால், அவை விண்ணகத்தின் ஞானத்தை பூமிக்குக் கொண்டுவருகின்றன. அவை இந்த உலகத்தின் தரமான வளர்ச்சியிலும் நமது வழக்கமான சிந்தனை முறையிலும் புரட்சியை ஏற்படுத்துகின்றன.

ஆசீர்வதிக்கப்படுவதற்கும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருப்பதற்கும், நாம் செல்வந்தர்களாகவும் வலிமைவாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது, ஆனால் பணிவு, மனத்தாழ்மை மற்றும் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; யாருக்கும் தீமை செய்யாமல், அனைவருக்கும் அமைதியைக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நற்பேறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஒரு சீடரின் ஞானமே நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்குச் சுவையைத் தருகிறது என்று இயேசு நமக்குக் கூறுகிறார். ஆகவே, இயேசுவின் ஞானத்தை நாம் கடைபிடிக்கத் தொடங்கினால், நாம் நமது சொந்த வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சமுதாய மற்றும் நமது நாட்டின் வாழ்க்கைக்கும் சுவையாக இருப்போம்.

உப்பு உணவைப் பாதுகாக்கிறது. இதன் காரணமாக உப்பு, கடவுளுடனான நமது உறவைப் பாதுகாப்பதற்கான நமது அடிப்படைத் தேவையை நினைவூட்டுகிறது. மேலும் இயேசுவின் ஒவ்வொரு சீடரும், இவுலகின் உப்பாகவும், கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு சான்றாகவும் இருக்கிறார்கள் என்பதும் இதன் பொருளாகிறது. இவ்வுலகின் உப்பாக, நாம் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கடவுளுடனான உடன்படிக்கைக்குச் சான்றுபகரவும் நாம் அழைக்கப்படுகிறோம், இதன் வழியாக  நட்பு மற்றும் சகோதரத்துவ வாழ்க்கையின் பிணைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை நாம் காட்டுகிறோம்.

மன்னிப்பின் உப்பை நம் காயங்களுக்குப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம். காயங்களில் உப்பைத் தடவியதும் அது அக்காயத்தை எரியச்செய்யும், ஆனால், அதுவே அதனை நலமாக்கும். கடவுள் நம்மை அன்புகூர்வது போல நாமும்  ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவரையொருவர் நேர்மையுடனும் தாராள மனப்பான்மையுடனும் அன்புகூர்வோம். நம்மிடம் இருக்கும் நல்லதைப் போற்றுவோம், தீமையால் நம்மை நாமே சிதைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டாம்.

உலகிற்கு ஒளி நாம்

உலகத்தின் ஒளியாகிய இயேசு, தம் சீடர்களும் இவ்வுலகின் ஒளியாகத் திகழவேண்டுமென கூறுகிறார். அதாவது, நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெறும்போது, ​​நாமும் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளியாகி அதனைப் பரவச் செய்கின்றோம். இயேசு தொடர்ந்து, மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. “எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்” (காண்க. மத் 5:14-15) என்கின்றார்.

சகோதரர் சகோதரிகளே, உலகத்திற்கு ஒளியாக இருக்க வேண்டும் என்று இயேசு கேட்டுக்கொண்டதன் வழியாக அவருடைய சீடர்களாகிய நாமும், மலையின் மீது அமைக்கப்பட்ட நகரத்தைப் போலவும், அணையாத விளக்கைப் போலவும் சுடர்விட அழைக்கப்பட்டுள்ளோம். ஆகவே, கிறிஸ்துவின் ஒளியால் இவ்வுலகைப் பற்றி எரியச்செய்வோம்.

அழகான இந்த நாடு வன்முறையால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்து சுடர்விடும் விளக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள். இந்நாட்டில் நீங்கள் அனைவரும் சகோதரத்துவ அன்பை பற்றி எரியச்செய்யவும், தென்சூடானைப் பாதுகாக்கும் உப்பாகவும், அதனை ஒளிர்விக்கும் ஒளியாகவும் வாழவும் உங்களுக்காக செபிக்கின்றேன். நான் என்றும் உங்களுடன் இருக்கின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2023, 14:08